Wednesday, February 4, 2026
HomeUncategorizedசங்கடம் தரும் சந்திரன்!- சிறப்பு கட்டுரை!

சங்கடம் தரும் சந்திரன்!- சிறப்பு கட்டுரை!

சந்திராஷ்டமம்

    ”சந்திராஷ்டமம்” என்பதை நான் பல ஆண்டுகள் அலசியமாகக் கடந்திருக்கிறேன். ஒருமுறை எனது சந்திராஷ்டம நாளில் ஒரு திரைப்பட கதை விவாதத்தின்போது தேவையற்ற மனஸ்தாபம் ஏற்பட்டது. அன்று நான் எடுத்துவைத்த வாதம் சரியானதாகவே இருந்தது. ஆனால் நான் அதை வெளிப்படுத்திய விதம் பிறருக்கு எரிச்சலைத் தந்தது. நான் மிகவும் மனம் வருந்தினேன். அதன்பின் அந்த தர்மசங்கடமான நிலை சரியானது. 

சிலநாட்கள் கழித்து அதுகுறித்து ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனது ராசி, நட்சத்திரத்தை கேட்டார். நானும் பதில் கூறவே, “நேற்றைய தினம் உனது நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். அதன் விளைவுதான் நீ நேற்று சந்தித்த பாதிப்பும், மனஸ்தாபமும்”என்றார். அவர் கூறியது எனக்கு சரியாகத் தோன்றியது!

அதுமுதல் ஆராய்ச்சி நோக்கில் நான் சந்திராஷ்டமம் குறித்து என்னைச் சுற்றியிருந்தவர்களின் ராசி, நட்சத்திரத்தை தெரிந்து கொண்டு கண்காணிப்பதுண்டு. அவரவர் ராசி நட்சத்திரங்களைத் தெரிந்து கொண்டு, சந்திராஷ்டமம் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுண்டு. பலரும் அதன் பின்னர் உஷாராகினர். இருந்தாலும் கூட இதுபோகிறபோக்கில் விளையாட்டாகவே நகர்ந்தது. அந்த நாளில் யாராக இருந்தாலும் மனரீதியாக சற்று அடக்கி வாசிப்பது நல்லது.  கடுமையான நாள் பற்றி விளக்கினார். 
ஒருநாள் நான் பணியாற்றிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு புறப்பட்டோம். படத்திற்கு கதாநாயகன் ஒரு புதுமுகம்.

இயல்பாகவே அந்த நாயகனுக்கு வாய்த்துடுக்குத்தனம் சற்று தூக்கல். அன்றைக்கு என்னவோ அது அதிகமாக இருந்தது. ஆகவே அவரது ராசி, நட்சத்திர விவரங்களைக்கேட்டேன். (அவர் ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவர். ஆனாலும்கூட அவர் தனது ராசி நட்சத்திரத்தைப் பற்றிய விவரம் தெரிந்து வைத்திருந்தார்!) அவரும் கூற நான் காலண்டரில் பார்த்தேன். அதன்படி அவருக்கு அன்றையதினம் சந்திராஷ்டம தினம்! 

உடனே நான் ”சார்.. இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம். ஆகவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக பேசவேண்டும். காரை நிதானமாகவே ஓட்டுங்கள். விவாதங்களில் அமைதியாக நடந்துகொள்ளுங்கள்” என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தேன்.
நான் கூறியதை அவர் கேட்டபாடில்லை! கிண்டல் செய்தார். நான் கண்டுகொள்ளவேயில்லை. இது நடந்தது காலை 6.30 மணியளவில். 

படப்பிடிப்பு நடைபெற்ற இடம் புழல் ஏரிப்பகுதி. மாலை 4.30 மணி. சூரியன் வேகமாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. அதேபகுதியில் ஓரிடத்திலிருந்து சற்றுதள்ளி  இருந்த அழகான ஒரு பின்னணிக்காக கேமரா மற்றும் ஒட்டுமொத்த யூனிட்டும் நகர்ந்தாயிற்று. ”ஹீரோ இன்னும் வந்து சேரவில்லையே.. போய் அழைத்து வாருங்கள்”என்று இயக்குனர் பரபரக்க, நானும் ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றேன்.

அங்கே- ஒரே கூட்டம். ஹீரோ தன் காரின் அருகே நிற்க, சுற்றிலும் தள்ளுமுள்ளு நிலையில் பல இளைஞர்கள். கூட்டத்தை விலக்கியபடியே ஹீரோவிடம் சென்றேன். அவருடைய வலதுகண்ணின் மேலே புருவத்தில் இரத்தகாயம். 

”என்ன நடந்தது” என்று ஒருவரிடம் விசாரித்தபோது, “உங்க ஹீரோ காரை ரிவர்ஸில் எடுத்தார். அப்போது ஒருவரின் பைக்கில் கார் லேசாக இடித்துவிட்டது. அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்காமல், ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எங்கள் ஆள் ஒருவன் ஹீரோவிற்கு குத்துவிட்டான்” என்று கூறினார். 

பின் ஒருவழியாக கெஞ்சிக்கூத்தாடி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஹீரோவை மீட்டு வந்தேன். அதன்பின் தூரத்தில் கேமராவை வைத்து, சில்ஹவுட் ஷாட்(உருவம் மட்டும் கருப்பாகத் தெரிய, பின்னணியில் கீழ்வானம் சிவந்திருக்கும் காட்சி.) எடுத்து ஒருவழியாக அன்றைய படப்பிடிப்பை முடித்தோம். 

எல்லாம் முடிந்தபின் என் அருகில் வந்த ஹீரோ, ‘சார்.. நீங்க சொன்ன மாதிரியே சந்திராஷ்டமம் அதோட வேலையை கரெக்ட்டா செஞ்சிடுச்சி’ என்றார்! அதுதான் சந்திராஷ்டமம்!   

    நவகோள்களில் ஒருவனான சந்திரன் மனோகாரகன். அதாவது மனம் சம்பந்தப்பட்டவன். சந்திராஷ்டம நாளில் மனதின் வேகம் இயல்பிற்கும் மேலாக சற்று தாறுமாறாக இருக்கும். குழப்பம் அதிகமாக இருக்கும். காரணம் அறியாமலேயே கோபம் கொப்பளிக்கும். அதனால் அலுவலகம், வீடு, பொது இடங்கள் என எங்காவது திடீரென சில பிரச்சினைகள் உண்டாகும்!

மனோகாரகனான சந்திரனின் தாக்கம் ஒவ்வொரு ஜீவராசிகளையும் இப்படி அவதிக்கு ஆளாக்குவதுண்டு. இதனாலேயே சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு அடங்காதவர்கூட ‘சந்திராஷ்டமம்” என்றால் சகலநாடிகளும் ஒடுங்கி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதுண்டு!

திருமண முகூர்த்தம் குறிக்கும்போது மணமக்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாட்களையே மணநாளாக முடிவு செய்வர். 
ஒருவர் தான் முன்னின்று செய்யும் வேறு எந்த ஒரு காரியங்களின் தொடக்கம் அல்லது சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றை தனது சந்திராஷ்டம நாளில் செய்வதில்லை. 

    சந்திராஷ்டமம் என்றால் என்ன? அது எப்போது வரும்?

ஜோதிடவியலின்படி ஒவ்வொரு மனிதர்களும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிப்பிரிவுகளுக்குள் அடங்குவர். அந்த 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களை உள்ளடக்கியவை. அந்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒரு ராசியில் 2 ¼ நாட்கள் பிரவேசிக்கின்றன. ஒருவர் பிறந்த ராசியிலிருந்து எட்டாம் இடத்திலுள்ள ராசியில் சந்திரன் என்கிற கிரகம் பிரவேசித்தால் அதுதான் சந்திராஷ்டமம். இது எல்லா ராசிக்காரர்களுக்கும் மாதம் ஒருமுறை கட்டாயம் வரும். அவரவர் நட்சத்திரத்திற்கு மட்டுமின்றி அந்த எட்டாம் ராசியில் சந்திரன் பிரவேசிக்கும் 2 ¼ நாளும் (சுமார் மூன்று தினங்கள்) எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

சந்திராஷ்டமம் என்பது வெறும் வாய்த்தகராறுதான் என்றில்லை. அன்றைக்கு மறதியினால் பெட்ரோல் போடாமல் விட்டுவிட்டு பைக்கை தள்ளும் நிலை வரலாம்! எதிர்பார்க்காமல் எவராவது வந்து வாகனத்தில் இடிக்கலாம்! இப்படி எதுவேண்டுமானால் நடக்கலாம்!

நான் ஜோதிடரல்ல.. என் அனுபவத்தில் கண்டதையே சொல்கிறேன். முடிவு உங்கள் கையில்!    

இதற்கும்மேல் போகாமல் நான் அடக்கி வாசிக்க வேண்டும். ஏதாவது வம்புத்தும்பு வரக்கூடும். ஏனென்றால் இந்த கட்டுரையை நான் எழுதும் இன்றைய தினம் எனது ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் ரவுண்ட்ஸ் வந்திருக்கிறார். ஆம். எனக்கு சந்திராஷ்டமம்!

மு.பழனிவாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments