Home செய்திகள் சிபிஎஸ்இ புதிய 3 மொழிக் கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு!

சிபிஎஸ்இ புதிய 3 மொழிக் கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு!

சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதலாக மேலும் 2 மொழிகளைக் கட்டாயமாக்கும் புதிய கொள்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை (PIL), அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) முறையீடு செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவைக் தலைமை நீதிபதி (CJI) அமர்வு முன்பாகக் குறிப்பிட்ட முகுல் ரோஹத்கி, புதிய சிபிஎஸ்இ கொள்கையின்படி ஒன்பதாம் வகுப்பில் மேலும் இரண்டு மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவர் திடீரென 9-ஆம் வகுப்பில் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டே 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எவ்வாறு எழுத முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த திடீர் நடைமுறை நாடு முழுவதும் பெரும் குழப்பத்தையும், மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், இந்தத் தடை கோரும் மனுவைத் தகுந்த அவசர வழக்காக வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அடுத்த வாரம் பல்வேறு இதர வழக்குகள் (Miscellaneous week) பட்டியலிடப்பட்டுள்ள வாரமாக இருந்தாலும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி அடுத்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் இதனைச் சரிசெய்து விசாரணைக்குப் பட்டியலிடுவதாக உறுதி அளித்துள்ளார்.

Exit mobile version