Thursday, February 5, 2026
HomeUncategorized”சோறு”- சிறப்பு கட்டுரை!

”சோறு”- சிறப்பு கட்டுரை!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவான “சாதம்” என்பது  உண்மையான தமிழ்ச்சொல் “சோறு” ஆகும். 

“சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்!” என்று மகாகவி சுப்ரமணிய பாரதி பாடினார்.  

தமிழர் வாழ்வில் அன்றாட வயிற்றுப்பாட்டில் முக்கிய அங்கம் வகித்த்தும், வகித்து வருவதும் “சோறு!”

நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியை வேகவைத்து சமைக்கப்படுவது. 

”இராமன் எத்தனை இராமனடி” என்பதுபோல் தமிழர்களின் வேளாண்மையில் எத்தனையோ நெல்வகைகள் இருந்திருக்கின்றன. அந்தந்த பருவ காலத்திற்கு, அந்தந்த நிலத்தின் பண்புகளுக்கு நீர்வளத்திற்கு ஏற்றாற்போல பல்வேறு வகையான நெல்வகைகளை தமிழினம் விளைவித்திருக்கிறது!

நெல்லின் வகைகளில்தான் இத்தனை என்றால், அதை அவர்கள் சோறாக ஆக்கிய விதமோ பலமாதிரி! 
தமிழரின் வாழ்வில் எத்தனை வகையான சோறு?  

 இன்சோறு, உப்பில்லாச்சோறு, உழுத்தஞ்சோறு, ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, மூங்கிலரிசிச்சோறு என்பன போன்ற பலவகை சோறு வகைகளை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இன்சோறு: 

     சில வகை இனிப்புப் பொருட்களைச் சேர்த்து சமைக்கப்பட்ட சோறுதான் ”இன்சோறு” என்று அழைக்கப்பட்டது. (அநேகமாக இன்று வழக்கத்தில் இருக்கும் சர்க்கரைப்பொங்கல், கற்கண்டு சாதம் போன்றவையாக இருக்கலாம்.) 

உழுத்தஞ்சோறு: 

    அரிசியோடு உழுத்தப்பருப்பையும் சேர்த்து சமைக்கப்பட்ட சோறு ”உழுத்தஞ்சோறு” என அழைக்கப்பட்டது. திருமண விருந்துகளில் இச்சோறு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. (இன்றும் ”உளுந்தங்களி” என்பது நம் வழக்கத்தில் உள்ளது. ருதுவான பெண்களின் இரத்த போக்கினால் ஏற்படும் உடல்தளர்வை சரிசெய்ய இந்த களி பெரிதும் துணை செய்கிறது.)

ஊன்சோறு:

   சோற்றோடு இறைச்சியைக்கலந்து சமைக்கப்பட்டதே ”ஊன்சோறு” ஆகும். பழந்தமிழ் நூலான பதிற்றுப்பத்தில் (பாடல்: 45) ”ஊன்துவை அடிசில்” என்கிற குறிப்பு உள்ளது. அக்காலத்தைய மன்னர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும் மக்களுக்கு இந்த “ஊன் சோற்றையே” பெருமளவு பரிமாறியிருக்கின்றனர் (இவ்வகையானது சங்க காலத்தில் சமைக்கப்பட்ட பிரியாணி போலும்!)

கொழுஞ்சோறு:

   கொழுப்பு முதலியன கலந்து சமைக்கப்பட்ட சோறுதான்  கொழுஞ்சோறு எனப்பட்டது. கொழுஞ்சோறு பற்றிய குறிப்பு புறநானூற்றுப்பாடல் 384- இல் இடம்பெற்றுள்ளது. 

செஞ்சோறு:

   ”செந்நெல்லரிசி” என்கிற ஒருவகை சிவப்பு நிறத்திலான அரிசியால் சமைக்கப்பட்ட சோறுதான் ”செஞ்சோறு” எனப்பட்டது. இதனை “செந்நெல் வல்சி” என்றும் அழைத்திருக்கிறார்கள். 

நெய்ச்சோறு:

   பலவகையிலும் உடலுக்கு ஆரோக்கியம் தருவது நெய். இது ஆயுர்வேத மருத்துவத்தில் உயரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வரக்கூடியது.  இப்படி சிறப்பு வாய்ந்த நெய்யினை அதிகளவு கலந்து சமைக்கப்பட்ட சோறு ”நெய்ச்சோறு”எனப்பட்டது. இதனை “நெய்ம்மலி அடிசில்” என்று குறிப்பிட்டுள்ளனர். குறிஞ்சிப்பாட்டு 204 –இல் இதுகுறித்து குறிப்புள்ளது. (இன்றும் கூட “அக்கார அடிசில்” என்கிற உணவு தமிழக பிராமணர்களின் விருந்துகளில் முக்கிய இடம்பிடித்து வருகிறது!) 

புளிச்சோறு:

   புளி அதிகம் கலந்து சமைக்கப்படும் சோறு ”புளிச்சோறு”! இது இன்றுக்கூட பயன்பாட்டில் உள்ளது. இதனை புளியஞ்சாதம், புளியோதரை என்றும் குறிப்பிடுகிறோம். எயினர் எனப்பட்ட வேட்டை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை நாடிவந்த பாணர் உள்ளிட்ட பல்வகை மக்களுக்கும் இச்சோற்றை பரிமாரியுள்ளனர். புளிச்சோறு இன்றும் கூட நம் பயன்பாட்டில் உள்ளது. இன்று ”வெரைட்டி ரைஸ்” என்கிற கூட்டணியில் புளிச்சோற்றுக்கு பிரதான இடம்!

பாற்சோறு:

   அக்காலத்தில் பால்வளம் மிகுந்த முல்லை நில மக்கள் தங்கள் சமையலின் போது பாலையே உலைநீராகக் கொண்டு (அதாவது அரிசியை வேகவைக்க தண்ணீருக்குப் பதிலாக) சமைத்த சோறு ”பாற்சோறு” எனப்பட்டது. இன்றும் சிலர் சர்க்கரைப்பொங்கல் வைக்கும்போது பாலையே உலை நீராகப் பயன்படுத்துகின்றனர். இவ்வகைச் சோறானது ”பாலுடை அடிசில்” என்றும் அழைக்கப் பட்டிருக்கிறது.

வெண்சோறு:          

   வெண்ணெல் அரிசியை உரலில் போட்டு குத்தி பின்னர் சமைக்கப்படும் சோறு ”வெண்சோறு” என்று அழைக்கப்பட்டது. இன்றும் நம் வழக்கத்தில் “வெண்பொங்கல்” உள்ளது!

மூங்கிலரிசிச்சோறு:

    மலைப்பிரதேசங்கள் அல்லது சமவெளியாயினும் காடுவளம் நிறைந்த பகுதிகளில் மூங்கில் மரங்கள் பெருமளவு இருந்திருக்கின்றன. (புல்வகையைச் சேர்ந்த மூங்கில் இன்று ஸ்டார் ஹோட்டல்கள், ரெஸார்ட்டுகள் போன்ற இடங்களில் அலங்காரமானத் தோற்றத்திற்காக மட்டும் பயன்படுகிறது!) மூங்கில் மரங்கள் ஒருகட்டத்தில் பூத்துக்குலுங்கும். அப்போது மூங்கில்களுக்கு நடுவில் இயற்கையாக அரிசி போன்ற திடப்பொருள் உருவாகும். அதுவே மூங்கில் அரிசி எனப்படும். அக்காலத்தைய மக்கள் தயிரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மோரையே உலைநீராக கொதிக்க வைப்பர். உலைநீர் தேவையான வெப்ப நிலையை அடைந்ததும் கொதித்ததும் மூங்கில் அரிசியை சோறாக்கினர். இது கொழுப்பு நீக்கப்பட உணவு வகை. சர்க்கரை நோயாளிகள், இதயநோயாளிகள் போன்றோருக்கு மிகுந்த நன்மையளிக்கும் எனக்கூறப்படுகிறது. 

உப்பில்லாச்சோறு:

  எவ்வகை அரிசியென்றாலும் உப்பில்லாமல் சமைக்கப்பட்ட சோறுதான் “உப்பில்லாச்சோறு”ஆகும். இது துக்க காரியங்களுக்கு, குறிப்பாக இடுகாட்டில் ஈமச்சடங்கின்போது பயன்படுத்தப்பெற்றது. பிணத்திற்கு புலையனால் இச்சோறு கொடுக்கப்பட்டது.

    ஆக, இப்படியெல்லாம் தமிழரின் வாழ்வியல் அங்கமாக விளங்கிய சோற்றினை பார்த்தாலேகூட”சர்க்கரை நோய் பதம் பார்த்துவிடும், கலோரி கூடிவிடும்”என்றெல்லாம் பயந்து வருகிறோம்! 

மறுபக்கம் சர்க்கரை நோய் மட்டுமின்றி உடல், மனம் ஆகியவற்றின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உலைவைக்கும் பீட்சா, பர்கர், ஃப்ரைட் ரைஸ், போன்ற “குப்பை உணவுகள் (Junk foods)” இன்னும் நம் வாய்க்குள் பெயராகக்கூட நுழையமுடியாத உணவு வகைகளை வயிற்றுக்குள் அடைத்து வருகிறோம்! காலத்தின் கோலமா? நம் அறியாமை காரணமா?

மேற்படி விஷயங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமுண்டு. அது “அடிசில்” என்கிற வார்த்தைதான்!
பழந்தமிழன் பயன்படுத்திய வார்த்தையாம், ”திருப்பாவை” தந்த ஸ்ரீ ஆண்டாள் பயன்படுத்திய வார்த்தையாம் “அடிசில்” என்கிற உணவுக்கான பெயர் இன்றும் கூட ”புளிச்சோறு, புளியோதரை” போன்று தமிழ் பிராமண சமுதாயம் பயன்படுத்தி வருகிறது என்பதும், அந்த வார்த்தையை தமிழ்க்குடிகள் பயன்படுத்துவதில்லை என்பதும் ஆச்சரியமான ஒன்று! 

சித்தாந்த முரண்பாடுகளால் தமிழ் மற்றும் தமிழக வரலாறு உண்மைத்தன்மையுடன் எழுதப்படவில்லை என்றே கருதுகிறேன்! 

–    மு.பழனிவாசன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments