ஆனந்த வாழ்வு தருவாள் அம்பகரத்தூர் பத்ரகாளி
அறந்தாங்கி சங்கர்
இந்த பாரத பூமியே ஒரு ஆன்மீக பூமி. இந்தியா எங்கிலும் பல்வேறு ஆலயங்கள் பக்தர்களின் ஆன்மீக தேடலுக்கு ஏற்ற வகையில் அருள் பாலித்து கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையில்லை.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாக விளங்கும் அந்த சிவபெருமான் , விநாயக பெருமான் , முருகன் பெருமான், காக்கும் கடவுளாக விளங்கும் பெருமாள் , ஆஞ்சநேயர் , மற்றும் காவல் தெய்வங்களாக விளங்கும் முனீஸ்வரன் , அய்யனார் என்று ஏகப்பட்ட ஆலயங்கள் தமிழகமெங்கும் பரவி கிடக்கின்றன.
இவை தவிர அம்மன் அருள் பாலிக்கும் திருத்தலங்கள் இந்த திருநாட்டில் ஏராளம் ஏராளம்… சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் , பண்ணாரி மாரியம்மன், கோவையில் கோனியம்மன் என்று அம்பாள் அருள் வழங்கும் அற்புத திருத்தலங்கள் தமிழகமெங்கும் பக்த கோடிகளுக்கு அருள் வழங்கி கொண்டுதான் இருக்கின்றன.
அப்படிப்பட்ட அற்புதமான சக்தி படைத்த அம்மன் கோவில்களில் ஒன்றுதான் காரைக்கால் அருகில் அமைந்துள்ள அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் ஆலயமாகும்.
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில், காரைக்காலில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்களில், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்று.
பெண்களின் சக்தியாக திகழும் அம்மனை, மகளிர் பல்வேறு வகையில் காணிக்கை செலுத்தியும், விரதம் இருந்தும் பக்தியோடு வழிபடுகின்றனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் அம்மனுக்கு விசேஷ திருவிழாக்களும் பூஜைகளும் நடத்தப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த பத்ரகாளியம்மன் கோவிலை, அம்பகரத்தூர் காளியம்மன் கோவில் என்றும் அழைப்பர்.
இந்த அம்பகரத்தூர் பத்ரகாளி கோயிலுக்கென்று ஒரு வரலாறு உண்டு. அது என்னவென்று கீழே காண்போம்.
அம்பரன் அம்பன் சகோதரர்கள் செய்த தவத்தின் பயனாக சிவன் அவர்களின் சிந்தை குளிர வரமளித்தார். ஆனால், ‘நீங்கள் ஒற்றுமையோடு இருக்கும் வரை உங்களை வெல்ல எவராலும் முடியாது’ என்ற நிபந்தனையையும் சொன்னார். அசுர சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். உடனே வெறிபிடித்து அலைந்தார்கள். கன்னியரைக் கவர்ந்தனர். எதிர்ப்போரை கொன்றனர். கதிகலங்கிய இந்திரன், பிரம்மன், திருமாலுடன் பிரம்மபுரி தலத்தை அடைந்தான். மூவரும் சிவனை ஆராதித்தனர். ‘‘அம்பர சகோதரர்கள் அறத்தை மீறுகிறார்கள். அவர்களிடமிருந்து நீங்கள்தான் இன்று மூவுலகையும் காக்க வேண்டும்’ என்று கோரினர். தன் இடப்பாகம் இணைந்த அம்மையை பார்த்தார், சிவன். அம்மை அளவிலா ஆற்றல்களை தமக்குள் தேக்கி ஒரு மூச்சில் வெளியேற்றினாள்.
உடனே கருநீலவர்ண தேகத்தோடு தோன்றினாள் மாகாளி. உமையவள் காளியை பார்த்து ‘‘நீ திருமாலோடு சேர்ந்து அம்பர சகோதரர்களை அழித்து வா’’ எனப் பணித்தாள். திருமால் அந்தண வேதியர் வேடம் பூண்டார். மாசில்லா மதியின் முகத்தோடு, பாதங்களில் தண்டைகள் ஒலிக்க, மின்னலாகத் திருமேனி பிரகாசிக்க அழகிய கன்னியாக காளி மாறினாள்.
அண்ணனும், தங்கையும் அரக்கர்களின் அரண்மனையோரம் நடந்தார்கள். காவலர்கள் வெகு எளிதாக அவர்களை அம்பர சகோதரர்களின் முன்பு கொண்டு நிறுத்தினார்கள். அம்பரன் இப்போதே இந்த கன்னி தனக்கு வேண்டும் என்றான். அம்பனும் காமத்தீயால் கலங்கினான். அந்த முதியவரைப் பார்த்து ‘‘இந்த கன்னியை கொடுத்துவிட்டு வேண்டிய செல்வங்களை எடுத்துச் செல்லுங்கள்’’, என்றான்.
இருவரும் தமக்குள் போட்டியிட்டனர். ஈசனின் வாக்கு மறந்து போனது. போட்டி பொறாமையானது; வளர்ந்து கோபமானது. முதியவரான மாலவன், ‘‘உங்களுக்குள் யார் வலிமையானவரோ அவரே என் தங்கையை திருமணம் செய்து கொள்ளலாம்’’ என்றார். அண்ணனும் தம்பியும் ஆத்திரத்தோடு மோதிக் கொண்டார்கள். இறுதியில் தம்பியைக் கொன்ற அம்பரன் அந்த அழகு மங்கையை வேட்கையுடன் நெருங்கினான். திடீரென பூமி பிளப்பதுபோல் சத்தம் கேட்டது. கன்னி மறைந்து காளியானாள். விரிந்த சடையும் தீயைப் பொழியும் கண்களுமாக கோரத்தோற்றம் பூண்டாள். முதலில் பயந்த அசுரன் எதிர்க்கும் முயற்சியில் பல்வேறு பயங்கர தோற்றம் கொண்டான். இறுதியாக எருமை வடிவம் பூண்டான்.
காளி தன் கரங்களில் சூலம், வாள், கேடயம், உடுக்கை, பாசம் முதலான ஆயுதங்கள் தரித்து அஷ்டபுஜ காளியாக அம்பரனின் முன் நின்றாள். அசுரப் படைகளை நோக்கி அஸ்திரங்களை பொழிந்தாள் காளி. எருமை உருவில் ஒரே பாய்ச்சலாக மாகாளியின் மீது பாய்ந்தான் அம்பரன். கையிலிருந்த வாளால் அவன் பிடரியை சீவினாள் காளி. எருமை உருவத்தை விட்டு அம்பரனாக சுய உருவம் பெற்றெழுந்த அவன் பெருஞ்சிரிப்பு சிரித்தான். அவனைத் தன் கரங்களால் பிடித்து பூமியில் கிடத்தி இடப்பாதத்தால் அவன் மார்பில் உதைத்து திரிசூலத்தால் அவனது மார்பை ஓங்கிக் குத்தி இருகூறாகப் பிளந்தாள். மூவுலகினரும் பத்ரகாளியாக நின்றருளிய தேவியை வணங்கினர். அம்பரனை அழித்த அவள் இத்தலத்திலேயே எழுந்தருள வேண்டும் என வேண்டி நின்றனர்.
அவளும் அவ்வாறே கருணை பூண்டு இன்றளவும் அமர்ந்துள்ளாள். அவள் எழுந்தருளியிருக்கும் இத்தலம் அம்பகரத்தூர் என்று பெயர் பெற்றது. காளியின் சந்நதியை குங்கும சுகந்தம் நிறைக்கிறது. கர்ப்பகிரகத்தின் முன்பாக இரண்டு பக்கமும் அழகிய துவாரவதியர் நின்றிருக்க தென்திசையில் வீற்றிருக்கிறாள் பத்ரகாளியம்மன். நெடிய தோற்றம். எண்கரங்களில் ஆயுதங்களுடன் அம்பரனை வதைத்த பாவத்துடன் அமர்ந்த கோலத்தில் அற்புதக் காட்சி. வலப்பாதம் மடித்து, இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திருசூலத்தால் அவன் மார்பைப் பிளக்கும் கோலம். முகம் முழுதும் கோபத்தின் செம்மை பரவியிருக்கிறது.
ஆனால், உற்றுப் பார்த்தால் கண்களில் கருணை பொங்குகிறது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் அரசி போன்ற கம்பீரத் தோற்றம். ஆனாலும், பார்வையில் எளிமை. சரணாகதியாக அவளிடம் மனதைக் கொடுத்துவிட்டால் போதும்; யுகம் தோறும், நாம் மறந்தாலும், தான் மறக்காது காத்தருள்வாள். நம் கெடு வினைகள், தீய எண்ணங்கள், நம்மைத் தாக்கும் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்குவாள். அவளை தரிசித்து வெளிவரும்போது தாயை பிரியும் பாச ஏக்கம் நம்மைச் சூழ்கிறது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் தலத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்பகரத்தூர். அன்னையை தரிசித்து அவள் அருள் பெற்று வரலாமே..
அறந்தாங்கி சங்கர்

