பிள்ளையார்பட்டி எனும் இந்த ஊர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கற்பகவிநாயகர் கோவில் இங்கு மிகப்பிரபலம் . காரைக்குடியிலிருந்து திருப்பத்தூருக்கு செல்லும் பாதையில் குன்றக்குடியை அடுத்து அமைந்துள்ளது.
பிள்ளையார்பட்டி என்ற பெயர் விநாயகர் கோயிலைக் கொண்ட ஒரு சிற்றூர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்ற பெயர் பிரசித்தமானது என்றாலும், எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம், இராசநாராயணபுரம் என மற்ற ஐந்து பெயர்களும் உள்ளன.
மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் ஆகியவை பிற்கால பெயர்களாக பிற்கால பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு இரண்டு ராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில் மிகுந்த பொலிவுடன் விளங்குகிறது.
இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மற்றும் சிவகங்கையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் ஒரு கோவில் உள்ளது, இது சுமார் 1300 ஆண்டுகள் பழைமையானது என நம்பப்படுகிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வம் கற்பக விநாயகர் ஆவார். மலையை உள்ளே செதுக்கி அமைக்கப்பட்ட சுமார் 6 அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சிலை வடக்கு நோக்கி உள்ளது. குகைக்கோயிலில் சிவன் மற்றும் பிற கடவுளர்களின் சிலைகள் உள்ளன.
கல்வெட்டுகளின் படி, இக்கோவில் 1091 முதல் 1238 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. பிள்ளையார்பட்டி கோயில் என்ற இந்த குடைவரைக் கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என கல்வெட்டுகள் கூறுகின்றன. பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோயில்களை அமைத்தனர். ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் பிள்ளையார் மற்றும் சிவலிங்கத்தின் சிலைகள் செதுக்கப்பட்டன.
மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இந்த கோயில் இருந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொ.ஊ. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலை செதுக்கப்பட்டிருக்கலாம். கிழக்கு வாயிலில் உள்ள ராஜகோபுரம் ஏழு தளங்களுடன் கூடியது. அடித்தளம் முதல் கல்லாரம் வரை இந்த கோபுரம் வெள்ளை கல்லாலும், அதன் மேல் பகுதிகள் செங்கல் மற்றும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்பாக உள்ள திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகர் கோபுரம் உள்ளது.
இந்த கோயிலின் வரலாறு, கலைகள், திருவிழாக்கள், ஆய்வுகள், சிற்பங்கள், ஆலயங்கள், தொல்லியல் ஆகியவை அதிசயம் கொண்டவை.

