அன்றைய பாரதம், ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்டிருந்த காலம்.
வாரிசுகளற்ற சிற்றரசுகள், வாரிசுகளற்ற கோயில் நிர்வாகத்தின் கீழ் வரும் சொத்துக்கள் அனைத்தையும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக சட்டம் இயற்றப்பட்டு, ஆங்கிலேய கவர்னர்கள் அதனை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள். அதன்படி சென்னை, பெல்லாரி போன்ற பகுதிகளுக்கு ஆங்கிலேய கவர்னராக விளங்கிய தாமஸ் மன்றோ, தன் ஆளுகைக்கு உட்பட்ட , மாஞ்சாலி கிராமம் அதாவது, இன்று மந்தராலயமாக அறியப்படுகிற, சுவாமி இராகவேந்திரர் அவர்கள் பிருந்தாவனம் அமைந்துள்ள இடத்திற்குச் சென்றார். அங்கிருந்த எல்லோரும் நடவடிக்கை எப்படி அமையப்போகிறதோஎன்றும் தங்கள் குருவான சுவாமி இராகவேந்திரர் தவிர வேறுகதியில்லை என்னும் நிலையில் மடத்தின் நிர்வாகிகளும் பொதுமக்களும் மருகி நின்றனர்.
தாமஸ் மன்றோ குதிரையில் வந்திறங்கினார்.
எல்லோரும் திகில் மனோபாவத்துடன் தவித்தனர்.
தாமஸ் மன்றோ சுற்றுமுற்றும் பார்த்தார். தன் காலணிகளை கழற்றி ஒரு ஓரமாக வைத்துவிட்டு முன்னேறினார்.
அப்போது சுவாமி இராகவேந்திரர் அவர்களின் பிருந்தாவனத்தின் அருகில் காவி உடை தரித்த ஒரு முதியவர் நின்றிருந்தார். அவர் தாமஸ் மன்றோவை வரவேற்க, அவர் அருகில் சென்றார் தாமஸ் மன்றோ. மற்றவர்கள் சற்று தள்ளியே நின்றனர்.

