ஸ்டார்ட் ..ஆக்ஷன்.
அத்தியாயம். 23.
இயக்குனர். ப.நீலகண்டன்.
‘சக்ரவர்த்தி திருமகள்’ படப்பிடிப்பு!
இயக்குனர் ப.நீலகண்டன் அவர்கள்.. வைத்த ஷாட்டை மாற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் வேறொரு ஷாட்டை வைக்கச் சொன்னார்! அதை வற்புறுத்தவும் செய்தார்!
எம்.ஜி.ஆர் அவர்களின் அந்த செயலை ப.நீலகண்டன் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
கோபத்தோடு.. படப் பிடிப்பு தளத்தை விட்டு வேகமாக வெளியே வந்து விட்டார்!
படத்தில் வரும் ஒவ்வொரு ஷாட்டையும்.. முடிவு செய்வது….என்பது ஒரு இயக்குனரின் பிரதான பணி!.. அதிலேயே ஒரு நடிகர் குறிக்கிடுகிறார் என்றால் அப்படிப்பட்ட நடிகரின் படத்தை தான் இயக்க தேவையில்லை என்று அவர் ஆத்திரத்தோடு ஃப்ளோரின்
வெளியே நின்று கொண்டிருந்தார்!.. அப்போது அங்கிருந்த ஒரு பெரியவரின் ஆலோசனை அவர் வாழ்க்கை மாற்றிவிட்டது!
நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொண்டு நம் எண்ணத்தை மாற்றிக் கொள்வதால் எந்த தவறும் நேராது!. மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் பல ஆண்டுகள் போராடி இன்றைக்கு ஒரு பிரதான இடத்தை அடைந்து இருக்கிறார்! எத்தனையோ இயக்குனர்களிடம் நடித்திருக்கிறார்! ஒரு காட்சிக்கு எந்த வகையில் நல்ல ஷாட்ஸ் வைக்கலாம் என்பது அவருக்கும் தெரியும்! திரு எம் ஜி ஆர் அவர்களுக்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிறார்.. அவருடைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்வது தவறில்லை!. கோபித்துக் கொண்டு விலகிப் போவதால் நஷ்டம்.. எம்.ஜி.ஆருக்கு இல்லை! நீலகண்டனுக்குத்தான்’ என்ற போதனை ப.நீலகண்டன் அவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது!
மெல்ல ஆத்திரமடங்கி திரும்பவும் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று எம்ஜிஆர் அவர்களின் விருப்பப்படியே அந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்!
அங்கே.. உருவான அவர்களின் நட்பு..
1957 ல் இருந்து 1976 முடிய 17 திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்களை இயக்கும் வாய்ப்பை ப.நீலகண்டன் அவர்களுக்கு தந்தது!
எம்.ஜி.ஆர் அவர்களின் ஆஸ்தான இயக்குனர் என்ற அந்தஸ்தும் அவருக்கு கிடைத்தது!
எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட பல சம்பவங்களுக்கு மத்தியில்.. அவர்.. படங்களை இயக்கும் சூழ்நிலை.. ப.நீலகண்டன் அவர்களுக்கு அமைந்தது.! காலில் அடிபட்டு சில காலம் நடிக்க முடியாமல் இருந்து திரும்ப நடிக்க வந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அவருடைய வாழ்க்கையை முடிவு செய்யும் படமாக ‘திருடாதே’ திரைப்படம் அமைந்தது!
‘எம்.ஜி.ஆர் அவர்கள் சரித்திர படங்களில் நடிக்கத்தான் லாயக்கு! சமூகப் படங்கள் அவருக்குப் பொருந்தாது’ என்ற விமர்சனங்கள் ஓங்கியிருந்த சூழ்நிலையில் …
1961 இல் ‘திருடாதே’ படம் உருவானது! அவரால் உருவாக்கப்பட்ட சரோஜாதேவி அவர்கள் பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருடைய கால் சீட்டுக்கு எம்ஜிஆர் அவர்களே காத்திருக்கும் சூழ்நிலை!
படத்தை பொறுமையோடும்.. அருமையாகவும்.. ப.நீலகண்டன் அவர்கள்.. இயக்கியிருந்தார்!
படம் வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது!..
எம்ஜிஆர் அவர்கள் சமூகப் படங்களிலும் நடித்து வெள்ளி விழா படங்களை தர முடியும் என்பது நிரூபணமானது!.
1967 இல் ‘காவல்காரன்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க.. ப.நீலகண்டன் அவர்கள் இயக்கிக் கொண்டு இருந்தார்!
1967. ஜனவரி .. விதிவசத்தால் எம்ஜிஆர் அவர்கள் சுடப்பட அவர் பேச முடியாத நிலை உருவாகி திரும்பவும் அவர் நடிக்கவே மாட்டார் என்ற சூழல்.. எழுந்தது! அவரது திரை வாழ்க்கையே முடிந்து விட்டது.. என்ற நிலை… ஆனால்.. எம்.ஜி.ஆர். அவர்கள் பாதிக்கப்பட்ட குரலோடு நடித்து படம் வெளியாகி வெள்ளி விழா படமாக வரலாறு படைத்தது!
அதைப்போலவே எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியல் களத்தில் குதித்து … ஆளும் கட்சியின் வெறுப்புக்கு ஆளாகி இருந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்ட படம்தான் ‘நேற்று இன்று நாளை’
அந்தப் படத்தையும் ப.நீலகண்டன் அவர்களே இயக்கினார்! துணிவோடு எம்ஜிஆர் அவர்களுடன் அவர் பயணப்பட்டார்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் படமாகவே ‘நேற்று இன்று நாளை’ அமைந்தது!
1976 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிப்பில்
வெளி வந்த ‘நீதிக்குத் தலை வணங்கு’
திரைப் படம்தான்.. ப.நீலகண்டன் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து இயக்கிய கடைசிப் படம்!..
எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வர் ஆன பிறகு ப நீலகண்டன் அவர்களை அடையாறு திரைப்பட கல்லூரியின் பிரசிடெண்ட் ஆக பொறுப்பு வகிக்க செய்தார்!..
சிறந்த எழுத்தாளரான ப.நீலகண்டன்.. அவர்கள்.. எழுதிய வண்ணப் பூக்கள் ’
திரையுலகைப் பற்றியும்.. சினிமா கலை பற்றியும்.. வெளி வந்திருக்கும்.. அற்புத நூல்.
ப.நீலகண்டன் அவர்களின் படங்கள் பல காலம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்..!
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

