ஸ்டார்ட்…ஆக்ஷன்
அத்தியாயம். 25.
இயக்குனர். பி.ஆர். பந்துலு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து கட்டபொம்மன் படத்தை உருவாக்க எஸ்.எஸ். வாசன்.. ஆசைப் பட.. அதை சிவாஜி கணேசன் அவர்கள்.. ஏற்க மறுத்ததற்கான.. காரணம்?
1948 இல் ‘சந்திரலேகா’ படத்தை எஸ். எஸ்.வாசன் அவர்கள் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அந்தப் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று சிவாஜி கணேசன் அவர்கள் போராடினார்! ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை…!
அந்த வேதனை வடு சிவாஜி கணேசன் அவர்கள் மனதில் ஆழமாக விழுந்து விட்டது!..அதனால் அவர் எஸ்.எஸ். வாசன் அவர்கள் நிறுவனத்தில் நடிக்க விரும்பவில்லை!
எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தன்னுடைய கட்டபொம்மன் திரைப் படத் திட்டத்தை கைவிட்டு பி.ஆர்.பந்துலு அவர்களின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப் படத்திற்கு முழு ஆதரவு கொடுத்தார்! தங்களிடம் உள்ள ஆராய்ச்சி குறிப்புகளையும்.. உபகரணங்களையும் கொடுத்து உறு துணையாகவும் இருந்தார்!
இதனால் பின்னாளில் எஸ்.எஸ். வாசன் அவர்களின் படங்களில்.. சிவாஜி கணேசன் அவர்கள் வெற்றிப் படங்களை நடித்து தரும் சூழலும் அமைந்தது!..
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் அவர்களோடு எஸ். எஸ்.ராஜேந்திரன் அவர்களும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வேண்டி இருந்தது! ஆனால் அந்த நேரத்தில் ‘சிவகங்கை சீமை’ படப்பிடிப்பில் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் மும்முரமாக இருந்ததால் வீரபாண்டிய கட்டபொம்மனில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவானது!..

ஜெமினி கணேசன் அவர்களை நடிக்க வைக்க பி.ஆர். பந்துலு அவர்கள் முடிவு செய்தார்!. ஜெமினி கணேசன் அவர்கள் தயங்கினார்!
எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் தனக்குப் பதில் ஜெமினி கணேசன் அவர்கள் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எழுதிக் கொடுத்தார்!
அதற்குப் பிறகு ஜெமினி கணேசன் அவர்கள் நடிக்க சம்மதித்தார்!
படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சிவாஜி கணேசன் அவர்களின் அன்னை இல்லத்தில் துவங்கியது!.
படத்தின் இறுதி கட்ட காட்சிகளை ஜெய்ப்பூரில் ஏகப் பொருட்செலவில்.. பிரமாண்டமாகப் படமாக்கினார்கள்!
படத்தை கேவா கலரில் எடுத்து அதை லண்டனுக்கு அனுப்பி அங்கே அதை டெக்னிக் கலராக மாற்றினார்கள்! அதோடு மட்டுமல்ல…
வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப் படம்… 1959 மே மாதம் முதலில் லண்டனில் தான் வெளியானது..! அதற்கு ஆறு நாள் கழித்து தான் … தமிழகத்தில் வெளியிட்டார்கள்!
இந்திய வரலாற்றில் ஒரு இந்தியப் படம்.. அயல் நாட்டில் முதலில் திரையிடப் பட்டு பின்னர்.. உள் நாட்டில் திரையிடப்பட்ட சரித்திரத்தை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உருவாக்கியது!
படம் வெள்ளி விழா கண்டது!
1960 இல் கெய்ரோவில் நடந்த ‘ஆஃப்ரோ ஆசிய திரைப்பட விழா’வில் போட்டியிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன!
ஆசிய கண்டத்தின் சிறந்த நடிகராக சிவாஜிகணேசன் அவர்கள் தேர்வு செய்யப் பட்டார்!
சிறந்த படத்துக்கான விருது .. பி.ஆர். பந்தலு அவர்களுக்கு கிடைத்தது!
சிறந்த இசையமைப்பாளர் விருது..
ஜி.இராமநாதன் அவர்களுக்கு கிடைத்தது!
இத்தனை பெருமைகளோடு அயல் நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய சிவாஜிகணேசன் அவர்களை அன்றைய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த
எம்.ஜி ஆர் அவர்கள் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தார்! இத்தனை சரித்திர சாதனையை வீரபாண்டிய கட்டபொம்மன் படம் செய்தது!..
ஆனால் இதற்கிடையே ….
‘தவறான வரலாற்று செய்திகள்.. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்.. இடம்.. பெற்றிருக்கின்றன… கட்டபொம்மன் ஒரு கொள்ளைக் காரனாகத்தான் வாழ்ந்தான்..’ …
என பல வரலாற்று ஆய்வாளர்களும்.. கலைப் பிரபலங்களுமே விமர்சித்தார்கள்! ஆனால் படத்தின் இமாலய வெற்றிக்கு முன்பு அந்த விமர்சனங்கள் எல்லாம் காணாமல் போயின!
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்.. கிடைத்த வெற்றிகளும்.. விருதுகளும்.. பி.ஆர். பந்துலு.. அவர்களை.. அடுத்து ஒரு வீரத் தமிழனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும்.. உத்வேகத்தை தந்தது..
எஸ்.எஸ். வாசன் அவர்கள்.. கட்டபொம்மன் கதையை எடுக்க முடியாமல் தோற்றதைப் போல..
இன்னொரு கதையையும்.. படமாக்க ஆசைப்பட்டு தோற்றிருந்தார்!
அந்த கதையையும் படமாக்கி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தோடு.. பி.ஆர்.பந்துலு.. அவர்கள் அடுத்து ஒரு படமெடுத்தார்…
அந்தக் கதை? அந்தப் படம்? அதன் ரிசல்ட்?
(தொடரும்)
இயக்குநர் நித்தியானந்தம்

