ஸ்டார்ட்.. ஆக்ஷன்
அத்தியாயம். 26.
இயக்குனர். பி.ஆர். பந்துலு .
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை ம.பொ. சிவஞானம் அவர்கள் நூலாக எழுதியிருந்தார்!
அதனை.. டி.கே. சண்முகம் அவர்கள் நாடகமாக நடத்தி வந்தார்!
அதைத்தான் எஸ்.எஸ். வாசன் அவர்கள்.. திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து.. தோற்றுப் போயிருந்தார்!
பி.ஆர். பந்துலு அவர்கள்.. வ.உ.சிதம்பரனார் வரலாற்றைப் படமாக்க முடிவெடுத்தார்!..
‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளையாக நடிக்க.. திரைப்படம் உருவானது!
ம.பொ.சி. அவர்கள் பட ஆலோசனைக் குழு தலைவராகச் செயல்பட்டார்!
சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று விடுதலையான எஸ்.டி சுந்தரம் அவர்கள் வசனம் எழுதினார்!
வ.உ.சிதம்பரம் பிள்ளையாக நடிக்க சிவாஜி கணேசன் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை! மிகவும் தயங்கினார்! பல நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பாத்திரங்களில் நடிப்பதிலோ.. புராண பாத்திரங்களில் நடிப்பதிலோ அவருக்கு என்றும் தயக்கம் இருந்தது இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் ஆடியன்ஸ் யாருமே அந்த கதா பாத்திரங்களை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள்!
ஆனால் வ.உ.சிதம்பரனார் சமீப காலத்தில் வாழ்ந்தவர்!அவரோடு பழகியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்!
‘அவரைப் போல் தான் இல்லை ..வேடம் பொருந்தவில்லை’ என்ற ரிசல்ட் வந்து விட்டால் படமும் தோல்வியடையும்! தன்னுடைய நடிப்பும் தோற்று விடுமே என்று சிவாஜி கணேசன் அவர்கள் மிகவும் பயந்தார்!
அதற்குப் பிறகு வ.உ.சிதம்பரம் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று அவரோடு பழகியவர்களை எல்லாம் சந்தித்து தன்னை தயார் படுத்திக் கொண்டு.. தன்னுடைய நடிப்பில் நிறைய மாற்றங்களை செய்து.. பாடி லாங்குவேஜில்.. நிறைய மாற்றங்களை உருவாக்கி வ.உ.சிதம்பரம் பிள்ளையாக நடித்தார்!.
சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவாக டி.கே.சண்முகம் அவர்கள் நடித்தார்.. பாரதியாராக எஸ்.வி. சுப்பையா அவர்கள்..நடித்தார்!
ஜெமினி கணேசன் அவர்களும்.. பிரதான பாத்திரத்தில் நடித்தார்!
நிறைய பொருள் செலவில் படம் எடுக்கப்பட்டது!
சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் பிரிட்டீஷ் அரசுக்கு.. சவால் விடும் வகையில் .. கடல் வாணிபத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை உடைக்க.. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிட்டெட்’ என்ற நிறுவனத்தை தூத்துக் குடியில் நிறுவி.. கப்பலை வாங்கி.. கடல் வாணிபத்துக்குப் பயன் படுத்தி புரட்சி செய்தவர்..வ.உ.சிதம்பரனார் அவர்கள்!
இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு அது பெரிய உறுத்தலானது!
அதன் விளைவாக பொய் குற்றச் சாட்டுகளில் வ.உ.சிதம்பரனார் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்! செக்கிழுத்தார்! சித்ரவதைகளுக்கு ஆளானார்!
அவரோடு சிறை சென்ற சுப்ரமணிய சிவா தொழு நோயாளியானார்!
சிறையிலிருந்து விடுதலை ஆன.. வ.உ.சிதம்பரனாரை வரவேற்க.. ஆள் இல்லை..! கப்பல் நிறுவனம் பறி போனது!..வீடே தனிமைச் சிறையானது!..
இந்த வரலாற்றை பிரமாண்ட செலவில்.. பி.ஆர். பந்துலு.. அவர்கள்.. படமாக்கினார்!..
கப்பல் காட்சிகள் பிரமிப்பூட்டின!
பாரதியாரின் சாகாவரம் பெற்ற பல பாடல்கள் படத்தில்.. இடம் பெற்றன.!
‘என்று தணியும்.. இந்த சுதந்திர தாகம்’..
‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’..
போன்ற பாடல்கள் இன்றும்… நம்.. தேசிய தாகத்தை தணிக்கின்றன!
படத்தில் ஜனரஞ்சகமான காட்சிகளை தர முடியாத சூழல்! அதனால் கிளைக் கதையாக வைத்த காட்சிகள் எதுவும் மக்களுக்கு திருப்பி தரவில்லை! வசூல் ரீதியாக படம் தோற்றது!
சிவாஜி கணேசன் அவர்களை வ.உ.சிதம்பரனாராக.. திரையில் பார்த்தது.. தன்.. தந்தையையே நேரில்.. பார்த்தது போல் இருந்ததாக வ.உ.சிதம்பரனார் அவர்களின் மகன் சொன்னது.. சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரிய விருது.. கிடைத்த மகிழ்வை கொடுத்தது!
அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்து வந்த நேரம்!.அவர்கள் இந்தப் படத்தை அரசியல் ஆக்கினார்கள்!
காங்கிரஸ் கட்சிக்கான பிரச்சாரப் படம் என்று விமர்சனம் செய்தார்கள்!
அதுவும் படத்திற்கு ஒரு எதிர்மறை உணர்வை கொடுத்தது!
அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப் படமாக.. மத்திய அரசின் பரிசைப் பெற்றது!
வரி விலக்கோடு மறுபடி வெளியிடப்பட்டு கொஞ்சம் வசூலை பார்த்தது!.
இருந்தாலும்.. பி.ஆர். பந்துலு..பெரிய பண இழப்புக்கு ஆளானார்!
அவர்.. மனம் தளரவில்லை.!
நாட்டு விடுதலைக்கு உழைத்த.. வ.உ.சிதம்பரனார்.. சுப்ரமணிய சிவா.. பாரதியார்.. வாஞ்சிநாதன் … போன்றோரின் தியாக வரலாறுகளை..
திரைப் பிம்பங்களாக.. காலத்துக்கும் அழியாத நினைவுச் சின்னங்களாக .. வார்த்த திருப்தியில்.. அடுத்து.. அவர்.. தயாரித்து இயக்கிய படம்,?.
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
