ஸ்டார்ட்.. ஆக்ஷன்.
அத்தியாயம். 31.
இயக்குனர் தாதா மிராஸி..
வங்க தேசத்தில்.. பிறந்து.. சங்கத் தமிழ் தேசத்தில்… முத்தான பல படங்களை இயக்கியவர்..
தாதா சாகேப்.. வரிசையில்… தாதா என்பதை தன் பெயரில்.. வைத்திருந்தவர்!
காலத்துக்கும் மறக்க முடியாத.. திகில்.. காவியத்தை.. வண்ணப் பெட்டகமாக தந்தவர்..
இந்த சாதனையாளர்தான்.. தாதா மிராஸி.. அவர்கள்..
அவர் கதாசிரியராகப் பணி புரிந்தது..நான்கு படங்கள்!
அவர் இயக்கியது ஒன்பது படங்கள்!
ஒரு நல்ல படைப்பாளிக்கு அடையாளம் படைப்புகளின் எண்ணிக்கையில் கிடையாது!..
அந்தப் படைப்பு… உருவாக்கும் பாதிப்பில் தான் … இருக்கிறது என்பார்கள்!..
அந்த வகையில் தாதா மிராஸி அவர்கள் இந்த குறுகிய எண்ணிக்கையிலேயே தமிழ் திரைப் பட உலகத்தில் ஒரு மறக்க முடியாத கலைஞனாக வலம் வந்தார்!
இவரது படங்களில் இவர் பயன்படுத்திய கதை யுத்திகளும்.. காட்சிப் படுத்திய.. தொழில்.. நுட்ப நுணுக்கங்களும் … இன்றும் பலரால் கையாளப் பட்டுக் கொண்டு
இருக்கின்றன!
தாதா மிராஸி அவர்கள் முதன் முதலில் 1955 இல் ‘முதல் தேதி’ என்ற படத்தில் கதாசிரியராக அறிமுகமானார்!
அதைத் தொடர்ந்து ‘சபாஷ் மீனா’
‘பலே பாண்டியா’.. ‘கொடுத்து வைத்தவள்’ ஆகிய படங்களில் கதாசிரியராக பணி புரிந்திருக்கிறார்!
அவர் இயக்குனராக பணி புரிந்த முதல் படம் ….
1960 இல் வெளி வந்த ‘கடவுளின் குழந்தை’
சின்ன அண்ணாமலை அவர்கள் திரைக்கதை வசனம் எழுத…
‘Nobody’s child’… என்ற அமெரிக்கப் படத்தின் தமிழ் வடிவமாக கடவுளின் குழந்தை படம் வெளி வந்தது..
அதைத் தொடர்ந்து 1963 ல் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில்
‘இரத்தத் திலகம்’ என்ற படத்தை இயக்கினார்!
சீன இந்திய போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அதன் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘ இரத்தத் திலகம்’
கல்லூரி நாட்களில் ஆரம்பிக்கும் கதை பிறகு நாயகன் ராணுவத்தில் சேருவதாக மாறி வேறு ஒரு கதைக் களத்துக்கு படம் செல்லும்!..
‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று கல்லூரியின் பிரிவு உபச்சார விழாவில்… ஹீரோவும்.. ஹீரோயினும் பாடும் பாட்டு பல கல்லூரிகளில் இன்றும் பாடப்படுகிறது !
அதே போல் கண்ணதாசன் அவர்கள் பாடி நடித்த ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்ற பாடல் சர்ச்சைக்குரிய ஒரு பாடலாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது!
பொதுவாக தாதா மிராஸி அவர்கள் படங்களில் கதை அவருடையதாக இருந்தாலும் … வேறு மொழியிலிருந்து எடுத்தாலும்… வேறொருவர் கதையாக இருந்தாலும்… எல்லாவற்றிலும் அடிப்படை நாதமாக ஒரு மையக் கருவை வலியுறுத்துவார்!
சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்கள் … மன உறுத்தலுக்கு ஆளாகி …. ஒரு கட்டத்தில் அதற்கு பதில் தர வேண்டிய நிலை வரும்!… தீயவர்கள் அவற்றை நியாயப் படுத்துவார்கள்! நல்லவர்களோ அந்தத் தவறுக்கு வருத்தப்பட்டு தங்களை தாங்களே வெறுத்துக் கொண்டு ஏதாவது ஒரு கட்டத்தில் பிராயச்சிதம் தேடுவார்கள்!..
தாதா மிராஸி அவர்களின் அத்தனை படங்களிலும் இந்த மையக் கரு இருக்கும்!
அந்த வகையில்.. ‘இரத்தத் திலகம் படத்தில்’… நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவரை கொலை செய்து விட்டு அவரது வீடு என்று தெரியாமலே அங்கே அடைக்கலம் ஆவார்!..
உண்மை தெரிந்ததும் குற்ற உணர்வில் அவர் தவிப்பார்!
காதலி தேசத் துரோகி என்று சந்தேகித்து பிறகு அவள் நல்லவள் என்பதை உணர்ந்து அந்த குற்ற உணர்வு தவிப்பார் !
இந்த நாயகனின் குற்ற உணர்ச்சியை மையமாக வைத்து தான் ‘இரத்தத் திலகம்’ படத்தை தாதா மிராஸி அவர்கள் இயக்கியிருக்கிறார்!
1966 இல் ‘அண்ணாவின் ஆசை’ என்ற படத்தை இயக்கினார்!
இது பிரபல தயாரிப்பாளராக பல சாதனைகளைக் கண்ட நடிகர் பாலாஜி அவர்களின் ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் வெளி வந்த முதல் படம்!..
1965 இல் வெளி வந்த Chand Aur Sooraj’ என்ற ஹிந்தி படத்தை தழுவி … எடுக்கப் பட்டு..
1966 இல் வெளி வந்த படம் ‘அண்ணாவின் ஆசை’
இந்தப் படத்திலும் தம்பியின் நல் வாழ்வுக்காக அண்ணன் இறந்ததாக நடித்து இன்சூரன்ஸ் தொகையை வாங்கி தம்பி குடும்பத்தை வாழ வைக்கும் கதைக் களம் !.
இந்தப் படத்தில் நல்லவன் ஒருவன் சந்தர்ப்பச் சுழலால் குற்றம் ஒன்று செய்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்!
வர்த்தக ரீதியாக வெற்றி அடையாத திரைப் படம்!..
இந்தப் படத்துக்குப் பின்னால் தாதாமிராஸி அவர்கள் இயக்கிய படம் தான் அவருக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் ஒரு காவிய படமாக அமைந்தது!..
அந்தப் படம்?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

