Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட்...ஆக்ஷன். அத்தியாயம்.34. இயக்குனர்.வீணை எஸ்.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்…ஆக்ஷன். அத்தியாயம்.34. இயக்குனர்.வீணை எஸ்.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்…ஆக்ஷன்.

அத்தியாயம்.34.

இயக்குனர். வீணை எஸ்.பாலச்சந்தர்.

1962  இல் வெளிவந்த தமிழ் திரைப் படம் ‘அவனா இவன்’….

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த ஒரு நிஜ கொலை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்…An American Tragedy !..

அந்த நாவலை தழுவி 1951 ல்

‘A Place In The Sun’ என்ற ஆங்கில படம் வெளி வந்தது!

அந்தப் படத்தைத் தழுவி வித்துவான் லட்சுமனை இணைத்துக் கொண்டு கதை எழுதி… எஸ் பாலச்சந்தர் அவர்கள் ‘அவனா இவன்’ படத்தை தயாரித்து இயக்கினார்!

படத்தின் இசையமைப்பாளரும்  அவர்தான்! படத்தில் கதாநாயகனும் அவர்தான்!

முதல் முறையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘கிரியேஷன்ஸ்’ என்ற பெயரை சூட்டியதும் அவர்தான்!

எஸ்.பி.கிரியேஷன்ஸ் என்ற அவரது நிறுவனம் ‘அவனா இவன்’ திரைப் படத்தை தயாரித்தது..

பணத்துக்காக மனைவியை கொன்று விட்டு  இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயலும் ஒரு ஆன்ட்டி ஹீரோ!.. டூர் வந்த இரு குழந்தைகள் அவன் செய்யும் கொலையை பார்த்து விடுகிறார்கள்!.. அவனை போலீஸில் சிக்க வைக்க எல்லா வகையிலும் முயல்கிறார்கள் !..

அதில் எப்படி ஜெயிக்கிறார்கள்?.. என்பதுதான் இந்த திரில்லர் படத்தின் கதை !..

படத்தில் ஒரு புதுமையை எஸ் . பாலச்சந்தர் அவர்கள் செய்திருந்தார் ! படம்  ஆரம்பித்தவுடன் டைட்டில் காட்சிகள் வராமல் படத்தின் 46 வது நிமிஷத்தில் டைட்டில்கள் வரும்!.. அதிலும் கருப்பு கண்ணாடி அணிந்த முகத்தோடு ஆன்ட்டி ஹீரோ இருக்கும் கோலத்தில் டைட்டில்கள் போடப்படும்! கடைசி கட்டமாக முழு முகம் …. இரு கண்களை மறைக்கும்  கருப்பு கண்ணாடி… Big Close up..அதைத் தொடர்ந்து ஒரு பக்க கண்ணை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி… Big Close up.. அந்த கண்ணாடிக்குள் தயாரிப்பு இயக்கம் எஸ்.பாலச்சந்தர் என்று டைட்டில்களையே வித்தியாசமாக  காட்டி இருப்பார்!

படத்தின் முடிவில் கொலைகாரனை போலீஸ் பிடித்துக் கொண்டு போக அதற்கு காரணமாக இருந்த சிறுமி அவனைப் பார்த்து டாட்டா சொல்ல அவன் திரும்பி அவளை பார்த்து …. டாட்டா காட்டுவது  ஒரு வித்தியாசமான வில்லத்தனத்தை பிரதிபலித்தது!

 படம் பெரிய வெற்றி பெறவில்லை.

எஸ்.பாலச்சந்தர் அவர்கள் 1964 தயாரித்து இயக்கிய இன்னொரு படம் ‘பொம்மை’.மற்றும் ஒரு மாறுபட்ட திரில்லர் படம்..

1907 இல் வெளி வந்த  ‘The Secret Agent ‘

நாவலைத் தழுவி 1936 இல்  ஹிட்ச்காக் ‘Sabotage’  என்ற திரைப் படத்தை இயக்கினார்!.

படத்தின் பிரதான கதாபாத்திரம்.. ஒரு.. சிறிய .. நடமாடும்.. பொம்மை …

படம் எடுக்க தேவையான பொம்மைக்கு அவர் அலையாத ஊர்கள் இல்லை.. செய்யாத முயற்சிகள் இல்லை … அமெரிக்காவிலிருந்து கூட அவர் விரும்பிய வண்ணம் ஒரு பொம்மையை வாங்க முயற்சித்தார்! கடைசியாக பாரிஸ் கார்னரிலேயே அவருக்கு அந்த சிறிய நடமாடும் பொம்மை கிடைத்தது!..அதை வைத்து படம் முழுக்க அவர் எடுத்திருக்கும் ட்ரிக் ஷாட்டுகள்.. பிரமிக்க வைத்தன! நல்லவன் ஒருவனை கொல்ல முயலும் வில்லன் கும்பல் ஒரு பொம்மைக்குள் வெடி குண்டை வைத்து… நல்லவன்  இடத்தில் அதை வைத்து விடுகிறார்கள் ஆனால் அந்த பொம்மை சந்தர்ப்ப சூழலில் பல இடங்களுக்கு கை மாறி முடிவாக வில்லன் காருக்குள்ளேயே ஐக்கியமாகி வெடித்து அவர்களை சாகடித்து தண்டிக்கிறது !..

திருப்பங்களும்.. திரில்லும்.. நிறைந்த.. காட்சிகளோடு … நல்ல பாடல்கள்களும்.. தத்தித் தத்தி.. நடந்து வந்தது!….

கே.ஜே.ஜேசுதாஸ்  அவர்கள் பாடிய முதல் தமிழ் படம் பொம்மை!

‘நீயும் பொம்மை…நானும் பொம்மை’ என்று அவர் பாடிய  முதல் தமிழ்ப் பாடல் இன்றும் நிலைத்து இருக்கும் ஒன்று..

படத்தின் முடிவில் டைட்டில்கள் வரும் சம்பந்தப்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்களும்..நடிக…நடிகையரும் திரையில் தோன்றி..அவர்கள் வாயாலேயே அவர்கள் பெயரைச் சொல்ல வைத்து புதுமை செய்திருந்தார்  எஸ்.பாலச்சந்தர்.. அவர்கள்!

பெரிய வெற்றி பெற்ற ‘ பொம்மை’ திரைப் படம் படம் அவரது ‘அவனா இவன்’ படத்தின் நஷ்டத்தை சரி கட்டியது!

பொம்மை திரைப்படம் தந்த வெற்றி உத்வேகத்தில் அவர் தயாரித்து இயக்கி அடுத்த படம் ‘நடு இரவில்’

அகதா கிறிஸ்டி அவர்களின் நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட ‘And Then There Were None’  என்ற  ஆங்கிலப் படத்தின் கதையை தழுவி ‘நடு இரவில்’ படத்தை தயாரித்து இயக்கினார்..

படம் எடுத்து முடிந்து பல வருடங்கள் கழித்து 1970 இல் தான்  வெளியானது !

ஆனால் அந்தப் படத்துக்கும் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது.!

ஒரு தீவில் இருக்கும் ஒரு தனிமை பங்களாவில் வரிசையாக நிகழும் கொலை கொலைகள் அதை செய்தது யார் என்ற திகில் ஓட்டும் சம்பவங்களோடு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது அதிலும் குறிப்பாக படத்தின் முக்கால்வாசியில் கொலைகாரனாக கருதப்பட்ட டாக்டர் மாடிப்டியில் வந்து நின்று என்ன நடந்தது என்று கேட்கும் இடத்தில் டைரக்ஷன் எஸ் பாலச்சந்தர் என்ற டைட்டில் கார்டு வரும்..

எஸ்.பாலச்சந்தர் அவர்கள்..மர்மப் படங்களுக்கு ஒரு பிதாமகன் என்றால் அது மிகையாகாது..

அவரது டெக்னிக்குகள் எல்லாமே இன்றும் பின் தொடரப்பட்டு வருகிறது! 1982 இல் பத்மபூஷன் விருது அவருக்கு கிடைத்தது!

அவரது திரைப் படங்கள் திகில் பட வரலாற்றில் மாறாத ஒரு இடத்தோடு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்!

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments