ஸ்டார்ட் ..ஆக்ஷன்
அத்தியாயம். 40.
இயக்குனர் ஸ்ரீதர்.
காஷ்மீரில் இடை விடாத படப்பிடிப்பு !.. அழகிய ‘டால்’ ஏரி.. வைஜெயந்தி மாலா அவர்களுக்கு ஆபத்தான ஏரியாகிப் போனது..
ஏரியில்.. படம் பிடிக்கும் போது..படகில் இருந்து வைஜெயந்தி மாலா அவர்கள் தவறி விழுந்து கிட்டத்தட்ட இறந்தே போகும் சூழ்நிலை!.. ஒளிப்பதிவாளர் தான் அவரை காப்பாற்றினார்!
வைஜெயந்தி மாலா.. அவர்கள்.. மறு ஜென்மம்.. எடுத்தார்!.. படப்பிடிப்பில் தொடர்ந்து.. கலந்து கொண்டார்!
இன்னொரு பாடல்.. காட்சியில்.. பனிச் சறுக்கும்.. விளையாட்டில்.. நடிக்கும் போது தனக்கு டூப் போட ஒத்துக் கொள்ளாமல் வைஜெயந்தி மாலா அவர்களே நடித்துக் கொடுத்தார்! படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் காஷ்மீரில் உள்ள ஒரு பழங்குடி சாதியினரோடு சண்டையிடும் காட்சியை ஸ்ரீதர் அவர்கள் படமாக்கினார்!
ஆனால் இந்திய காஷ்மீர் உறவில் சிக்கலை உருவாக்கி விடும் என்பதால் சென்சார் போர்டு அந்த சண்டை காட்சிக்கு அனுமதி தரவில்லை!.. ஸ்ரீதர் அவர்கள் அதை மாற்றி எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்! இப்படி பல சிரமங்களுக்கு இடையே திட்டமிட்ட நாட்களை மீறி எக்கச்சக்கமாக செலவு செய்து தயாரான படம்..1961 இல் வெளியாகி.. பல ஊர்களில்.. நூறு நாட்களைக் கடந்து ஓடியது… பாடல் காட்சிகள்.. படமாக்கப் பட்ட விதம்.. பிரமிக்க வைத்தன!
இந்தப் படத்தின் பெயரில் ஒரு புதிய பிராண்ட் சேலையை 1961 இல் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் வெளியிட்டார்!
தேனிலவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.. படத்தை உருவாக்க ஆரம்பித்தார் ஸ்ரீதர் அவர்கள்!
Casa Blanka’ என்ற ஆங்கில படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு சில மாற்றங்கள் செய்து அவர் உருவாக்கிய படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..
ஆங்கிலப் படத்தில் முழுக்க சிறையில் நடக்கும் கதையை …. மாற்றி மருத்துவமனையிலேயே கதை நடப்பதைப் போல அமைத்து முற்றிலும் வித்தியாசமான ஒரு படைப்பாக படத்தை உருவாக்கினார்! சிவாஜி கணேசன் அவர்களை ஒரு முதியோராக சித்தரித்து.. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதைத்தான் நெஞ்சில் ஓர் ஆலயமாக எடுக்க திட்டமிட்டு இருந்தார் ஸ்ரீதர் அவர்கள்! பிறகு அவரே அந்தக் கதையை மாற்றி விட்டார்
படத்தில் ஹீரோவாக நடிக்க தமிழுக்கு அறிமுகம் இல்லாத கன்னடத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நடிகர் கல்யாண் குமார் அவர்களை பயன் படுத்திக் கொண்டார்! நாடக மேடைகளில் வலம் வந்து கொண்டிருந்த முத்துராமன் அவர்களுக்கு இரண்டாவது கதாநாயகன் பாத்திரத்தை தந்து துணிச்சலாக படம் எடுத்தார்!
முதலில் திருமதி விஜயகுமாரி அவர்கள் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டி இருந்தது!.. திருமதி. தேவிகா அவர்கள் கதையை கேட்டு விட்டு படத்தில் நடிக்க விரும்பி சம்மதித்தார்.!
சாவுக்குப் போராடும்.. தன் கணவனை..
தன் முன்னாள் காதலனிடம்.. சிகிச்சைக்கு ஒப்படைக்கும்.. நாயகியின்.. போராட்டமே.. மையக்கரு!..
ஆழமான.. காட்சிகள்.. வனசங்கள்.. கேமிரா கோணங்கள்! தேர்ந்த நடிக.. நடிகையர்.. என திரைப்படம்…. சிறப்பாக அமைந்தது..!
படத்தின் பாடல் காட்சிகள் அற்புதமாக அமைந்தன!
‘எங்கிருந்தாலும் வாழ்க’… ‘சொன்னது நீதானா’… ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ போன்ற பாடல்கள் படமாக்கப்பட்ட விதங்கள் இன்றும் பலரால் பின் பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன!
சொன்னது நீதானா பாடலில் கட்டிலுக்கு அடியில் புகுந்து வெளி வரும் கேமரா… manipulation… பிரமாதம்!..
படத்தில் செட்டுக்குள் இருக்கும் mirror களில் காட்டப் படும்.. பாத்திரங்களின் பிம்பங்கள்.. பிரமிப்பூட்டும்.. Compositions ஆக.. இருந்தன….
முக்கோண காதல்.. கதை மன்னன் என ஸ்ரீதர் அவர்கள்.. புகழப்பட்டார்!
நாகேஷ் அவர்களை பெரிய அளவில் ஒரு நகைச்சுவை நடிகராக உருவாக்கிய படம்!.. குட்டி..பத்மினி குழந்தை நட்சத்திரமாக அனைவரின் இதயத்தையும் ஆட்கொண்டார்! மருத்துவமனை செட்.. ஒன்று போடப்பட்டு.. முழுப் படமும்.. எடுக்கப்பட்ட ஒரே தமிழ் படம் நெஞ்சில் ஓர் ஆலயம்! படப் பிடிப்பையும் ஒரு மாதத்துக்குள்ளாக முடித்திருக்கிறார்கள்!
நெஞ்சில் ஓர் ஆலயத்திற்குப் பிறகு.. ‘சுமைதாங்கி’.. ‘போலீஸ்காரன் மகள்’.. ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீதர் அவர்கள் 1963ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.. என்ற வித்தியாசமான திரைப் படத்தை இயக்கினார்!
பூர்வ ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு திகில் நிறைந்த ஒரு படமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’.. உருவானது!
ஆழமான வித்தியாசமான படங்களை தந்து கொண்டிருந்த ஸ்ரீதர் அவர்கள் முற்றும் முழுக்க வேறொரு பாணியில் ஒரு படத்தை தயாரித்து இயக்கினார்! அது வேறொரு வகையான ட்ரெண்ட் செட்டராக அமைந்தது!
அந்தப் படம்?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

