ஸ்டார்ட்.. ஆக்ஷன்
அத்தியாயம் .41.
இயக்குனர் ஸ்ரீதர்.
‘காதலிக்க நேரமில்லை..’
கண்டு களிக்காதவர்.. யாருமில்லை என்பது போல… நகைச் சுவைப் படங்களின் மகுடமாக.. 1964 ல் வலம்.. வந்த.. திரைப்படம்…
ஸ்ரீதர் அவர்களின் மாறுபட்ட.. ரசனைக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்த காமெடி படம்.
மென்மையான காதல் கதையையும் அழுத்தமான சோகக் காட்சிகளையும் வைத்து படத்தை உருவாக்குவது ஸ்ரீதர் அவர்களின் தனித்துவம்!
அவரும் சித்ராலயா கோபு அவர்களும் மெரினா கடற்கரைக்கு அடிக்கடி செல்வது உண்டு.!.. காரில் அமர்ந்து கதைகள் பேசுவது உண்டு! அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படம் எடுக்கலாம் என்று ஸ்ரீதர் அவர்களுக்கு யோசனை தந்து அதை உருவாக்க வைத்தவர் கோபு அவர்கள்!
தன்னால் நகைச்சுவையை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க முடியுமா?.. தன் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?.? என்ற சந்தேகம் ஸ்ரீதர் அவர்களுக்கு இருந்தது! ஆனாலும் திரைக்கதை முழுக்க உருவான பிறகு அவருக்கு நம்பிக்கை பிறந்தது!
முழு நீள நகைச்சுவை படத்தை ஈஸ்ட்மேன் கலரில் முதல் முறையாக தமிழில் உருவாக்கினார்! புதுமுகங்களையே பிரதான வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்ற அவருடைய பாணியை மாற்றிக் கொள்ளவில்லை!
மருத்துவக் கல்லூரியில் சேர வந்த ராமன் என்கின்ற இளைஞரை ரவிச்சந்திரன் என்ற கதாநாயகனாக மாற்றினார்!..
ஓடும் விமானத்தில் சந்தித்த வசுந்தரா தேவி என்ற விமானப் பணிப் பெண்ணை காஞ்சனா என்ற நடிகையாக மாற்றினார்! கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த சச்சுவை நகைச்சுவை நடிகையாக மாற்றினார்!
இப்படி பல பரிசோதனை செய்து படத்தை இயக்கினார்!
ஆழியார் டேமில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் படப்பிடிப்பை நடத்தினார்! சென்னையிலும் படத்தின் ஆரம்பத்தில் மெரினா கடற்கரையில் ஒரு டூயட் பாடலை எடுத்தார்!
படம் மகத்தான வெற்றி பெற்றது! ரோமன் ஹாலிடே படத்துக்கு இணையாக படத்தை இயக்கிய பெயர் ஸ்ரீதர் அவர்களுக்கு கிடைத்தது! படமும் நகைச்சுவை படங்களின் இலக்கணமாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது!
அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் அவர்களோடு இணைந்து ‘நெஞ்சிருக்கும் வரை’ என்ற படத்தை எடுத்தார்!.
படம் முழுக்க கதாபாத்திரங்கள் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் நடிக்கும் ஒரு புது இலக்கணத்தை உருவாக்கினார்!
அடுத்து சில படங்களை எடுத்தவர் … வெளி நாட்டில் படப் பிடிப்பை நடத்த முடிவு செய்து ‘சிவந்த மண்’ படத்தை ஆரம்பித்தார் ….
வித்தியாசமான கதைக் களத்தை அமைத்து ஆரம்பக் காட்சிகளை வெளி நாட்டில் நடப்பதைப் போல் அமைத்து கதாநாயகனும் …. நாயகியும் காதலர்கள் ஆவதை படமாக்கினார்!
அதற்குப் பிறகு தாய் நாட்டுக்கு திரும்பும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த திடுக்கிடும் திருப்பங்களும்.. சுதந்திரத்துக்காக போராட வேண்டிய போராளிகளாக நாயகனும் நாயகியும் மாறும் சம்பவங்களும் …. படத்தை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது! வெளி நாட்டில் பட்டத்து ராணி என்ற பாடல் படமாக்கப்பட்ட விதம் பிரமிப்பூட்டியது!
ஹெலிகாப்டரில்.. வில்லன் கதாநாயகனை துரத்தும்..காட்சியும் மயிரிழையில் அவர் குனிந்து தப்பிக்கும் காட்சியும் படமாக்கப்பட்டது! நடிக்கும் போது சற்று டைமிங் தவறி சிவாஜி கணேசன் அவர்கள் தலைக்கு மேலே பறக்கும் ஹெலிகாப்டரில் அடிபடாமல் தப்பித்தார்!..
ஒரு வித்தியாசமான படமாக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் ‘சிவந்த மண்’!
அதைத் தொடர்ந்து சில படங்கள் ஸ்ரீதர் அவர்களுக்கு போதிய வெற்றியை தரவில்லை!
அதன் விளைவாக பணக் கஷ்டத்துக்கு ஆளானார்!
சிவாஜி கணேசன் அவர்களை வைத்து ஆரம்பித்த படத்தை தொடர முடியாத சூழலில் அவர் வாழ்வில் நடந்த ஒரு பெரிய திருப்பம்?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

