ஸ்டார்ட்.. ஆக்ஷன்
அத்தியாயம். 42.
இயக்குனர். ஸ்ரீதர்.
ஸ்ரீதர் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரி செய்து கொள்ள எம்ஜிஆர் அவர்களை வைத்து படம் எடுக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு உருவானது!
ஆனால் அதை அவர் செயல் படுத்துவதில் சிக்கல் இருந்தது!..
1964 ஆம் ஆண்டிலேயே எம்ஜிஆர் அவர்களை வைத்து ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டவர் ஸ்ரீதர் அவர்கள்!
அந்தப் படத்தை கருப்பு வெள்ளையில் எடுக்க முடிவெடுத்திருந்தார்!
அதே நேரம் வண்ணப் படமாக புது முகங்களை வைத்து ‘காதலிக்க நேரமில்லை’ படத்தையும் தயாரிக்க இருந்தார்!..
புது முக நடிகர்களை வைத்து வண்ணப் படத்தில் எடுத்து விட்டு தன்னை வைத்து.. கறுப்பு – வெள்ளையில் படம் எடுக்க ஸ்ரீதர்.. அவர்கள்.. திட்டமிட்டது.. எம்.ஜி.ஆர் அவர்களை.. சங்கடப் பட வைத்திருக்கிறது..!அவர்..விலகிக் கொள்ள..படம்..கைவிடப்பட்டது..!
எந்த திட்டமிட்ட நோக்கத்தோடும்.. தான் அதை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்த ஆசைப்பட்ட ஸ்ரீதர் அவர்கள் அதற்கான தருணங்கள் வராமல் இருந்தார்!
இப்போது அவர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்து அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினார்!
அந்த தகவலை தெரிந்து கொண்ட
எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய இராமாவரம் தோட்டத்தில் ஸ்ரீதர் அவர்கள் வந்து தன்னை பார்க்க வேண்டாம்! இருவருக்கும் பொதுவாக நடிகர் எம்.என்.நம்பியார் அவர்கள் இல்லத்தில் சந்திப்போம் என்று பெருந் தன்மையோடு சொன்னார்!
ஸ்ரீதர் அவர்கள் தன் வீடு தேடி வந்து கெஞ்சினார் என்பது போன்ற பிம்பம் வெளி உலகத்துக்கு வந்து விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் அவர்கள் எண்ணினார்!
இதைத் தெரிந்து கொண்ட ஸ்ரீதர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் இல்லத்துக்கே சென்று அவரை சந்தித்தார்!.. கடந்த காலத்தில் நடந்ததற்கு விளக்கங்கள் கொடுத்து இனி எதிர்காலத்தில் தன்னைப் பற்றி யார் எது சொன்னாலும் அதை தன்னிடமே கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளச் சொன்னார்!
எம்.ஜி.ஆர் அவர்கள் படத்தில் நடிக்க சம்மதித்தார்! நடிப்பதாக எழுதியும் கொடுத்தார்!
அதை வைத்து பைனான்ஸியர்களிடம் பணம் வாங்கி ஸ்ரீதர்.. அவர்கள்.. உடனடியாக திரைப்படத்தை ஆரம்பித்தார்!
அந்தப் படம் தான் ‘உரிமைக் குரல்’ கிராமிய மனம் தவழும் காவியம்!1974 இல் வெளியானது!
சமுதாயத்துக்கு குரல் கொடுக்கும் ஒரு இளைஞனின் வீர கதையாகவும்.. குடும்ப கதையாகவும்.. காதல்.. கதையாகவும்.. உரிமை குரல் பட்டி தொட்டி எங்கும் மகத்தான வெற்றியை பெற்றது!
எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது!
ஸ்ரீதர் அவர்கள் தன்னுடைய பொருளாதார சரிவிலிருந்து மீண்டார்! எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக ஆவதற்கு முன்பு 1977 இல் வெளியான ‘மீனவ நண்பன்’ என்ற படத்தையும் ஸ்ரீதர் அவர்கள் இயக்கினார்!..
அதற்குப் பிறகு முழுக்க இளமை ததும்பும் படங்களை அப்போது வளர்ந்து கொண்டிருந்த கமல்ஹாசன் அவர்களையும்.. ரஜினிகாந்த் அவர்களையும் ..மற்றும்.. புதிதாக வலம் வந்த நடிக நடிகையரை வைத்து பல வெற்றி படங்களை தந்தார்! கமலஹாசன் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அவர் தந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது..’
மோகன் அவர்களை வைத்து ‘தென்றலே என்னைத் தொடு: போன்ற வெள்ளி விழா படங்களை கொடுத்தார்!..
அவர் கடைசியாக இயக்கிய படம் ‘தந்து விட்டேன் என்னை’
பிறகு கொஞ்ச காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 2008ல் இயற்கை எய்தினார்! அவரது படங்கள் முக்கோண காதல் கதைக்கும் நகைச்சுவைக்கும் கவித்துவமான இலக்கணமாக என்றென்றும் ஜொலிக்கும்!
– இயக்குநர் நித்தியானந்தம்

