ஸ்டார்ட் … ஆக்ஷன்
அத்தியாயம். 44.
இயக்குனர்.P.மாதவன்.
49 படங்களை இயக்கியவர்!.. அதிலும் 39 படங்கள் தயாரித்து அவர் தயாரித்து இயக்கியவை!
15 படங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து இயக்கி வெள்ளி விழா கண்டவர்!
இத்தனை பெருமைக்கும் உரியவர் இயக்குனர் பி.மாதவன் அவர்கள்!
பிறந்தது 1928 ஆம் வருடம்.!..
பிறந்த குழந்தையின் அழகான முகத்தை பார்த்து அவரது அம்மா இவன் நடிகனாக போகிறான் என்று ஆசீர்வதித்தார்.!
அதன் விளைவு … பி.ஏ. பட்டதாரியாக ஆன பிறகு பி.மாதவன் அவர்கள் நடிகனாக முயற்சி செய்தார்! ஆனால் விதி அவரை நல்ல ஒரு இயக்குனராக மாற்றி அழகு பார்த்தது.!
இயக்குனர்கள் டி.ஆர்.ரகுநாத் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரோடு பல படங்களில் துணை இயக்குனராக பணி புரிந்து இயக்குனராகும் தகுதியை வளர்த்துக் கொண்டார்!
1963 இல் ‘மணியோசை’ என்ற திரைப் படத்தை முதல் முறையாக இயக்கினார்! படம் தோல்வி அடைந்தது! ஆனால் அவர் மனம் தளரவில்லை!
சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க
‘அன்னை இல்லம்’ என்ற திரைப் படத்தை அதே 1963 ஆம் ஆண்டில் இயக்கி வெற்றி பெற்றார்!
அந்த வெற்றி பி. மாதவன். அவர்களை சிவாஜி கணேசன் அவர்களோடு இணைந்து திரைப் படங்களை பதினைந்து திரைக் காவியங்களை உருவாக்க வைத்தது!
1963 இல் துவங்கிய அவர் கலைப் பயணம் 1992 வரை நீடித்தது!
49 படங்களை இயக்கினார்!..
‘அருண் பிரசாத் மூவிஸ்’ என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்!
அதில் 39 படங்களை தயாரித்து இயக்கினார்.!
1964 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ‘தெய்வத்தாய்’ என்ற திரைப் படத்தை இயக்கினார்! அந்த ஒரே ஒரு படம் தான் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து பி.மாதவன் அவர்கள் இயக்கிய படம்!
சிவாஜி கணேசன் அவர்களை வைத்து மறக்க முடியாத பல காவியங்களை தந்தார்!
சிவாஜி கணேசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார்!
அந்தப் படத்தில்.. இடம் பெற்ற …
‘யாரை நம்பி நான் பிறந்தேன்? போங்கடா போங்க’ என்ற பாடல் இன்றும் பலர் வாழ்வில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை தத்துவம்!
ஒரு சாப்பாட்டு ராமன் நாடு போற்றும் நடிகன் ராமனாக உருமாறும் ‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற திரைப் படத்தை தயாரித்து இயக்கினார்!
சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் திரைப் படங்கள் எப்படி படமாக்கப்படுகின்றன என்கின்ற நுணுக்கங்களை எல்லாம் மக்களுக்கு சுவாரசியமாக அந்தத் திரைப்படம் காட்டியது!..
வித விதமான கதா பாத்திரங்களில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற படம்…ராமன் எத்தனை ராமனடி!
நேர்மையாகவும் கடும் உழைப்பாளியாகவும் வேலை பார்த்து வந்த ஒரு மனிதன் ஓய்வு பெற்ற பிறகு வாழ்வில் எதிர் கொள்ளும் சோதனைகளையும் சூழ்நிலைகளையும் உணர்வு ததும்ப ‘வியட்நாம் வீடு’ திரைப்படம் மூலம் சிறந்த குடும்பச் சித்திரமாக தந்தார்!..
‘Les Miserables’ என்ற பெயரில் வந்த ஆங்கிலத் திரைப் படத்தை தழுவி ஏழை படும் பாடு என்ற திரைப்படம் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்டது!
அந்த கதையின் மையக் கருவை வேறு கோணத்தில் ‘ஞான ஒளி’ என்ற திரைப் படமாக தயாரித்து இயக்கினார்!
மாதா கோயிலில் மணி அடிக்கும் கதாபாத்திரம் ஒரு கோடீஸ்வரன் ஆக உருமாறி உறவுக்கு போராடும் அற்புதமான திரை காவியமாக ‘ஞான ஒளி’ அமைந்தது!
மேலை நாட்டு நாகரீக திமிரோடு வாழும் நவீன நாயகியை நம் பாரம்பரிய கலாச்சாரம் பண்பாடு.. இவைகளை வைத்து கதாநாயகன் வெற்றி காணும் ‘பட்டிக்காடா… பட்டணமா’… என்ற திரைப் படத்தை இயக்கினார்! வெள்ளி விழா படமாக சாதனை கண்ட படம்.. அது!..
தெருக் கூத்து…மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்வியலை சொல்லும் அற்புதமான கலை படைப்பாக ‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படம் மக்களை கவர்ந்தது! அந்த திரைப் படத்தில்.. மேடை நாடக நடிகனாக சிவாஜி கணேசன் அவர்கள் பல வேடங்களில் நடித்து ….பல உணர்வுகளை பிரதி பலித்து ஒரு நடிப்பு ராஜாங்கமே நடத்தியிருந்தார்!
கடமை தவறாக காவல் அதிகாரி தன் மகனென்றும் பார்க்காமல் தவறு செய்தவனை சுட்டு நாட்டை காக்கும்
எஸ்.பி சௌத்ரி என்ற பாத்திரத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தங்க பதக்கம்’!
பல பரிமாணங்களில் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து வெற்றி காவியங்களை தந்தவர். பி.மாதவன் அவர்கள்!
ஆழமான … கதைக் களம்!.. வித்தியாசமான.. Takings…. என.. தொழில்.. துணுக்கம் வாய்ந்த.. படைப்புகளை உருவாக்கியவர்!..
செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஆட்சி செய்த காலத்தில் பி.மாதவன் அவர்களை எம்.ஜி.ஆர் திரைப் படக் கல்லூரியில் முதல் சேர்மன் ஆகவும் …
ஃபிலிம் டிவிஷனின் மேனேஜிங் டைரக்டர் ஆகவும் பதவி தந்து பி.மாதவன் அவர்களுக்குப் பெருமை சேர்த்தார்!
பி.மாதவன் அவர்கள் 2003 இல் தன்..75வது வயதில்..காலமானார்!
அவரது.. படைப்புகள்.. திரையுலகில்.. வளரும்.. கலைஞர்களுக்கு. வழி காட்டும் புத்தமாக என்றும் விளங்கும்!
– இயக்குநர் நித்தியானந்தம்

