ஸ்டார்ட்.. ஆக்ஷன்.
அத்தியாயம். 45.
இயக்குனர். கே. பாலச்சந்தர்.
திரைப்படத் துறையில் செய்த சாதனைக்கு ஜனாதிபதி கையால் தாதா சாகிப் பால்கே விருது!..
9 தேசிய விருதுகள் !..
11 தமிழ்நாடு மாநில விருதுகள்!. ஐந்து நந்தி அவார்ட்ஸ் !..
13 ஃபிலிம் ஃபேர் அவார்ட்ஸ் …. என்று விருதுகளாலேயே சிகரம்.. அமைத்து இயக்குனர்களின் சிகரமாக விளங்கியவர் ….
கே.பாலச்சந்தர் அவர்கள் …
1930 இல் தஞ்சை மண்ணில் பிறந்தார்!.. எட்டு வயதில் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் படத்தைப் பார்க்க ஆரம்பித்து திரைப்படத் துறையில் ஆர்வம் பெற்றார்!..
12 வயதில் நாடகங்களில் நடிக்கவும் எழுதவும் இயக்கவும் கற்றுக் கொண்டார்.
படிப்பு முடிந்ததும் திருவாரூரில் பள்ளிக் கூட வாத்தியாராக ஆசிரியராக 1949 இல் பணி புரிந்தார்!
பிறகு சென்னைக்கு வந்து அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸில் அப்ரண்டீஸ் ஆக வேலைக்கு சேர்ந்தார்!.. வேலையிலிருந்து கொண்டே மேடை நாடகங்களில் கவனம் செலுத்தினார்!
யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடகக் குழுவில் சேர்ந்து நடங்களை எழுதி வந்தார்!
பிறகு அவருக்கென்று நாடக குழுவை அமைத்து பல மேடை நாடகங்களை எழுதி தயாரித்து இயக்கினார்.!
மேஜர் சுந்தரராஜன் அவர்கள், நாகேஷ் அவர்கள்.. ஸ்ரீகாந்த் அவர்கள்.. மற்றும்.. சௌகார் ஜானகி போன்ற திரைப்பட நடிப்பு பிரபலங்களும்.. அவரது.. நாடகங்களில் நடித்தார்கள்!..
மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி அரங்கேற்றினார்!
போதிய வரவேற்பு இல்லாமல் அதை தமிழாக்கம் செய்து மேடைகளில் அரங்கேற்றினார்! மகத்தான வரவேற்பு கிடைத்தது! அது இந்தியிலும் படமாக்கப்பட்டது.!
திரைப்படஎழுத்தாளராக வலம் வர ஆரம்பித்தார்..
1964 இல் எம்.ஜி.ஆர் அவர்களின் ‘தெய்வத் தாய்’ திரைப் படத்துக்கு கதை வசனம் வசனம் எழுதினார்!
‘தெய்வத்தாய்’ திரைப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடி அந்த வருடத்தின் வெற்றி படமாக அமைந்தது! ஆனாலும் அதில் பணி புரிந்த கே.பாலச்சந்தர் அவர்களுக்கு மன நிறைவு கிடைக்கவில்லை…!
நாடக மேடைகளில் ஆழமான வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற்று வந்த அவருக்கு திரைப் படங்களுக்கு வசனம் எழுதும் பாணி கை வசப்படவில்லை! அந்நியமாக இருந்தது!..அத்தோடு மட்டுமல்ல.. எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் உள்ள ஐந்து பாட்டு …. ஐந்து சண்டை காட்சிகள் என்ற ஃபார்முலாவுக்குள் அவரால் தன்னுடைய வசன வித்தைகளை காட்ட முடியவில்லை!
அந்தப் படத்தில் பணியாற்றியது அவருக்கு மன திருப்தியைத் தரவில்லை!
எம்.ஜி.ஆர். அவர்களோடு அவர் பணிபுரிந்த ஒரே திரைப்படம் ‘தெய்வத்தாய்!’

அவர் எழுதிய ‘சர்வர் சுந்தரம்’ நாடகம் ஏ.வி.எம் நிறுவனத்தால் திரைப் படமாக தயாரிக்கப் பட்டு நாகேஷ் அவர்கள் நடிக்க …. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது!
நாகேஷ் அவர்களின் நகைச்சுவை நடிப்போடு அவரது குணச்சித்திர நடிப்பும் வெகுவாக பாராட்டுகளை பெற்றது!
திரைப் படங்கள் எடுக்கும் முறைகள் படத்தில் காட்டப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது!
1965…! ‘நீர்க் குமிழி’ என்ற நாடகத்தை பாலச்சந்தர் அவர்கள் எழுதினார்! அந்த நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்பே படித்துப் பார்த்த தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் அவர்கள் அதை திரைப்படமாக தயாரிக்க முடிவெடுத்தார்!
கே.பாலச்சந்தர் அவர்களையே அந்த திரைப் படத்தையும் இயக்கச் சொன்னார்!
பாலச்சந்தர் அவர்களுக்கு தயக்கம்!
அவருக்கு திரைப்பட தொழில் நுட்ப விஷயங்களில் எந்த வித அறிவும் … அனுபவமும் இல்லாத நிலை!
ஆனாலும் ஏ .கே .வேலன் அவர்கள் கே.பாலச்சந்தர் அவர்களை … இயக்கும்படி வற்புறுத்தினார்!
நாடக மேடைகளில் இயக்குபவர் திரைப்படத்தையும் இயக்க முடியும் என்று பிடிவாதமாக பாலச்சந்தர் அவர்களையே இயக்க வற்புறுத்தினார்.
பாலச் சந்தர் அவர்களும் படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்!
ஆனால் படத்தின் தலைப்பை மாற்றி சொல்லி பலரும் வற்புறுத்தினர்!
முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆண்ட்டி செண்டிமெண்ட் பெயர் தேவையா? அவரது திரைப் பட பயணம் நீர்க்குமிழி போல சட்டென காணாமல் போய்விடும்!.. என்றெல்லாம் விமர்சித்தார்கள்!
ஆனால்.கே.பாலச்சந்தர் அவர்கள் ‘நீர்க் குமிழி’ பெயரை மாற்றவில்லை!
நாகேஷ் அவர்கள் பிரதான வேடத்தில் நடித்த படத்தின் மையக் கரு சாவின் விளிம்பில்.. இருக்கும்.. ஒரு.. நோயாளியின்.. சோகத்தை சித்தரித்தது!
1965 தீபாவளித் திருநாளில் ‘நீர்க்குமிழி’ திரைப் படம் வெளியானது!
மக்கள் வான வேடிக்கைகள்.. பட்டாசுகள்.. புத்தாடைகள்.. என்று சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதனைப் பற்றி அவர் உருவாக்கி இருந்த படத்துக்கு என்ன வரவேற்பு கிடைத்தது?
பலர் கணித்ததை போல அவரது இயக்குனர் பயணம் நீர்க்குமிழி ஆக மறைந்து போனதா? இல்லை கடல் அலையாக தொடர்ந்ததா?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்