Sunday, March 22, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 47. இயக்குனர். கே.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன் அத்தியாயம். 47. இயக்குனர். கே.பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் .. ஆக்ஷன்

அத்தியாயம். 47.

இயக்குனர். கே.பாலச்சந்தர்.

வெள்ளிவிழா’.. என்ற திரைப் படத்தை இயக்கிய

கே.பாலச்சந்தர் அவர்கள் அந்தப் படத்தின் ரிலீசுக்கு பிறகு ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்! வழக்கமான குடும்ப பிரச்சனைகளைத் தாண்டி சமுதாயப் பிரச்சினைகளையும் குடும்ப பிரச்சனையுடன் சேர்த்து சொல்லும் வகையிலும்.. அதே நேரத்தில் பிறர் சொல்ல தயங்கும் சிக்கலான பிரச்சனைகளை துணிச்சலோடு சொல்லும் வண்ணமும் தன் எதிர் கால திரைப் படங்கள் இருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்!

அதன் விளைவு அரங்கேற்றம்’!…

ஐதீக சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் வாழும் கதையின் நாயகி ….குடும்ப கஷ்டங்களுக்காக விலை மாதாக மாறும்.. துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படும்  விபரீதமான கருவை முன்னிறுத்தி அரங்கேற்றம் படத்தை அவர் உருவாக்கினார்!

குழந்தை பருவத்தில் நடித்திருந்த கமலஹாசன் அவர்கள் வளர்ந்து இளைஞர் ஆகி மீண்டும் திரையுலகில் இளம் நடிகராக ஆள வந்தான் என்ற வேடத்தில் அறிமுகமான முதல் படம் அரங்கேற்றம்!..

பிரமிளா அவர்களும்ஜெயசித்ரா அவர்களும்.. மற்றும் ஜெயசுதா அவர்களும் அறிமுகமானார்கள்!..

இந்தப் படத்திற்கு காமெடி ட்ராக் எழுத மௌலி அவர்கள் பணிக்கப்பட்டார்!

ஆனால் படத்தில் சொல்லப்பட்ட கருத்தாழமிக்க… சீரியஸான காட்சிகள்…. காமெடி டிராக்கால்  கெட்டு விடும் என்று மௌலி அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்!

அரங்கேற்றம் திரைப்  படம் 1973 இல் வெளி வந்தது!

ஏகப்பட்ட கண்டனங்கள்!.. பாலச்சந்தர் அவர்களுக்கு அவர்  சார்ந்த மக்களே எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்தார்கள்!

பாலச்சந்தர் அவர்களுக்கு நாயகியின் குடும்பத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்து குடும்பமாக சித்தரிக்கும் எண்ணம்.. முதலில் இல்லை! நகரில் வாழும் ஒரு மத்திய தர குடும்பத்தின் அத்துனை பிரச்னைகளையும் வெளிக் காட்ட ஆசைப் பட்டார்!

அவர் பிறந்தஅவர் வளர்ந்த…

அவரை சுற்றி தினம்..பார்த்த  சமூகத்தை கதையின் பின்புலமாக வைத்தார்!

மற்றபடி வேறு எந்த நோக்கமும் அவருக்கு இல்லை!

ஒரு பெண் குடும்பச் சூழலால்

ஒரு கொடூரமான எல்லைக்கு தள்ளப் படுகிறாள்  என்பதைச் சொல்ல நினைத்தார்!.

மற்றபடி எந்த சமூகத்தையும் தரம் மாற்றிச் சொல்லும் எண்ணம் அவருக்கு இல்லை!

பலத்த கண்டனங்களுக்கிடையே படம் மாபெரும் வெற்றி பெற்றது! ஒரு புது அலை குடும்ப படங்களில் உருவானது!.. அரங்கேற்றத்தை தொடர்ந்து அவர் இயக்கிய மற்றுமொரு சாதனைப் படம்

அவள் ஒரு தொடர்கதை’..

1974 இல் இந்த திரைப்படம் வெளியானது..!

எழுத்தாளர் எம்.எஸ்.பெருமாள் அவர்கள் கலைமகள் இதழில் எழுதிய வாழ்க்கை அழைக்கிறது என்ற கதையை படித்த தயாரிப்பாளர் இராம அரங்கண்ணல் அவர்கள் அந்தக் கதையை வைத்து திரைப் படம் ஒன்றை இயக்கும்படி பாலச்சந்தர் அவர்களை கேட்டுக் கொண்டார்! பாலச்சந்தர் அவர்கள் தன் பாணியில் திரைக் கதை அமைத்து இயக்கினார்!

குடும்பக் கஷ்டத்திற்காக தன்னை தியாகம் செய்து கொள்ளும் கதாநாயகி வேடத்திற்கு  புதுமுகமாக .. ‘எர்ணாகுளம் ஜங்ஷன் என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்த திருமதி. சுஜாதா அவர்களை  தேர்வு செய்தார்!..

ஜெயலட்சுமி என்ற நடிகையை அறிமுகம் செய்தார்!

படத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்திய  ‘ஃபடாபட் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி …. அவர் ஃபடாபட் ஜெயலட்சுமி’.. ஆக திரையுலகில் வலம் வந்தார்! கமலஹாசன் அவர்கள் இந்தப் படத்தில் நடிப்பதற்காக மிமிக்ரி கற்றுக் கொண்டார்!

படத்தில் ஜெய் கணேஷ் ஸ்ரீபிரியா அவர்கள். மற்றும் ராஜேஷ் மற்றும்  திடீர்க் கன்னைய்யா ஆகியோரும் புது முகங்களாக அறிமுகமானார்கள்!..

திரைப் படத்தில் வெளிப்பட்ட விஷுவல் compositions பெருமளவு பாராட்டப்பட்டது!..

 கே.பாலச் சந்தர் பயன்படுத்தியகட் டயலாக்ஸ்என்ற டெக்னிக்  பலத்த கைத் தட்டல்களைப் பெற்றது!..

அவள் ஒரு தொடர்கதை’… திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று தமிழ் திரைப் படங்களில் புது பாதைக்கு வழி காட்டியது!..

1975 ஆம் ஆண்டு.!.

தமிழக திரை உலகை ஆட்சி செய்து உச்சம் பெற போகும் ஒரு நடிகரை கே.பாலச்சந்தர் அவர்கள் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப் படுத்திய பொன் ஆண்டு!..

அந்த நடிகர்?..

அந்த திரைப் படம்?..

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்
 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments