ஸ்டார்ட் .. ஆக்ஷன்
அத்தியாயம். 52.
இயக்குனர்.பாரதிராஜா.
1978... ஆம்.. ஆண்டு!..
‘கிழக்கே போகும் ரயில்’ திரைப் படத்தைத் தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற கிரைம் திரில்லரை பாரதிராஜா அவர்கள் இயக்கினார்..
நகர்ப் புறத்தில் நடக்கும் திகில் படம்!..ஒரு சைக்கோ கொலைகாரனை கதாநாயகனாக மையமாக வைத்து உருவான திரைப்படம்!
அவன் ஏன் கொலைகாரனானான் என்ற நியாயமான அழுத்தமான காரணங்களைச் சொல்லி ஒரு கிரைம் திரில்லர் படத்திற்கு அழுத்தமான லாஜிக்கை.. கொடுத்த படம்!
கமல்ஹாசன் அவர்கள் கோட்… சூட் என நவீன உடை அலங்காரங்களோடும் …. சிகை அலங்காரங்களோடும் மேற்கத்திய பாணி மேனரிஸங்களோடு நடித்த திரைப் படம்!
கிராமத்து வாசனையே இல்லாமல் முழுக்க முழுக்க நகர்ப் புற காட்சிகளை அமைத்து வித்தியாசமான பின்னணி இசை … பாடல் காட்சிகள்..கதா பாத்திரங்கள்… ஒளிப்பதிவு.. என ஆங்கிலப் பட பாணியில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை பாரதிராஜா அவர்கள் இயக்கியிருந்தார்!..
படம் பெரிய வெற்றி பெற்றது!.. அவரால் எந்த வகையிலும் படத்தை இயக்க முடியும் என்பது நிரூபணமானது! ஹாட்ரிக் வெற்றியும் பெற்றார்!..
1979 இல் ‘புதிய வார்ப்புகள்’ என்ற படத்தை இயக்கினார்
இந்தப் படம் அவரது வலுவான கிராமிய பாணியிலேயே எடுக்கப்பட்டது!..
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவரது உதவியாளர் கே.பாக்யராஜ் அவர்களை கதாநாயகனாக துணிச்சலோடு அறிமுகப்படுத்தினார்!..
கே.பாக்ய ராஜ் அவர்களுக்கு ஒரு Spex ஐ மாட்டி … அவரது.. தோற்றத்தையே மாற்றி.. ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியராக நடிக்க வைத்தார்!
கே.பாக்யராஜ் என்ற நாயகன்.. உதயமானார்..!
தன்னிடமிருந்த கதையாற்றல் … இயக்க அறிவு …இவைகளையும் வைத்து.. கே.பாக்யராஜ் அவர்கள் மிகச் சிறந்த திரைக் கதை ஆசிரியராகவும் …. நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இன்றைக்கும் வலம் வந்து கொண்டிருக்க … புதிய வார்ப்புகள்.. அஸ்திவாரம் போட்டது!
நான்காவது தொடர் வெற்றியையும் பாரதிராஜா அவர்கள் பெற்றார்!..
அது தமிழ் திரைப் பட வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக அமைந்தது!
‘புதிய வார்ப்புகளை’ தொடர்ந்து ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற திரைப் படத்தை இயக்கினார்! ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற திரைப் படத்தில் ஒரு இயக்குனர் கதாபாத்திரத்தில் … நடித்து.. தன் நடிப்புத் திறமையும் காட்டினார்!
சமுதாய கருத்துக்களை வெளிப்படுத்தும் ‘நிழல்கள்’ என்ற மாறு பட்ட திரைப் படத்தையும் உருவாக்கினார்!
‘அலைகள் ஓய்வதில்லை’… ‘மண் வாசனை’ போன்ற படங்களை இயக்கி மண்ணின் மனம் மாறாத காதல் காவியங்களையும் இயக்கி காட்டினார்!
நேர் மாறாக கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில்.. ‘டிக்..டிக்..டிக்’ என்ற நவீன மயமான திரில்லர் திரைப் படத்தையும் ….
‘ஒரு கைதியின் டைரி’ என்ற மிகவும் மாறுபட்ட திரைப் படத்தையும் இயக்கினார்!
இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவர் இயக்கிய திரைப் படம்..1985 இல் வெளி வந்தது!..
அந்த திரைப் படம்…
பாரதிராஜா அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பொன்னான படம்…!
ஒரு திரை மேதைக்கு அவர் காட்டிய பெரிய மரியாதை…!
அந்தத் திரைப்படம்?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
