“இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. இதன் பொருள், உடல் மெலிந்தவர்களுக்கு எள் நல்லது, உடல் பருத்தவர்களுக்கு கொள்ளு நல்லது என்பதாகும்.
நம் முன்னோர்கள் பல வகையான பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டனர், அவற்றில் கொள்ளு முக்கியமானது. கொள்ளு ரசம், சூப், துவையல், குழம்பு போன்றவற்றை உண்டு உடலை ஆரோக்கியமாக பராமரித்தனர். கொள்ளு நிறைய நார்ச்சத்துக்களையும் புரதமும் கொண்டிருப்பதால், உடல் எடையை குறைத்து, செரிமான பிரச்சனைகள், அஜீரணம், புளிச்ச ஏப்பம் போன்றவற்றை தவிர்க்கும். மேலும், அதிக புரதச்சத்து உள்ளதால் உடலுக்கும் உறுப்புகளுக்கும் வலுவூட்டும்.

உடல் எடையை குறைக்கும், அதே போல் ஹார்மோன்களின் செயல்பாட்டை சீராக்கும். இதனால், அதிகமாக உண்ணும் பழக்கத்தையும் துரித உணவுகளையும் தவிர்க்க முடியும். கொள்ளு உணவில் கலோரிகள் குறைவு, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் காலை மற்றும் மதிய உணவில் கொள்ளு சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான உடலை பெற முடியும்.

கொள்ளு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை சீராக்கும், பிசிஓடி நோயையும் சரிசெய்யும். ஒரு ஸ்பூன் கொள்ளை ஒரு டம்ளர் தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைத்து, அதனை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வர, பிசிஓடி பாதிப்பு குறையும், வெள்ளைப்படுதல் குணமாகும். அடி வயிறு வலி, இடுப்பு வலி, கால் வலி, சோர்வு, அதிக ரத்தப்போக்கு போன்றவை குணமாகும்.
ஆண்களுக்கு கொள்ளு அதிகப்படியான கால்சியம், அயன், பாஸ்பரஸ் மற்றும் முக்கிய நுண்ணூட்டச்சத்துகளை கொண்டிருப்பதால், மலட்டுத்தன்மையை சரிசெய்யும். மேலும், இன்ஃபெர்டிலிட்டி சிகிச்சை பெறும் ஆண்கள் கொள்ளு உணவுகளை உண்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும்.
சுவாச நோய்களை தடுக்கும் கொள்ளு, சளி, இரும்பல், மூச்சு விடுவதில் சிரமம், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். ஒரு ஸ்பூன் கொள்ளை இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆகும் வரை விட்டு வடிகட்டி, தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர, சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லை கரைக்கும். இவ்வளவு நன்மைகளை கொண்ட கொள்ளை சரியான முறையில் உட்கொண்டால் பல நன்மைகளை பெறலாம்.

