திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதில் தேனியைச் சேர்ந்த பெண்ணான விஜயஸ்ரீ பெயரில் பல கோடி ரூபாய் சொத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் பெண்ணின் குடும்பத்தினர் பெண்ணை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.
இதற்காக ஏடிஜிபி ஜெயராமை தொடர்பு கொண்டுள்ளனர். இதன்பின் பெண்ணின் தந்தை வனராஜா, ஏடிஜிபி ஜெயராமை சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், எம்எல்ஏ-வுமான பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்துள்ளனர்.
இந்த சூழலில் காதல் ஜோடியை தேடி பெண்ணின் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு இல்லை என்பதால், இளைஞர் தனுஷின் தம்பியை கடத்தி இருக்கிறார்கள். இதில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது ஏடிஜிபி ஜெயராமின் அரசு வாகனம் என்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார்.
அங்கு பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் இருவரும் ஆஜராகினர். அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி உடனடியாக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட அவர், 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்யப்பட்டார். இது தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் மீது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது உச்சநீதிமன்றம் ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு ஒத்துழைக்கும் போது சஸ்பெண்ட் செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
