ஓர் அஞ்சலட்டையின் இறுதியில் சுப்புரத்தினதாசன் என்று தம் பெயரை எழுதுவதற்கு இடம் போதவில்லை என்று அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதியவர், காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார்.
பெயரெழுத்துகளுக்கு நடுவில் ”எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?” என்று கருதியவர் அவற்றைப் பிடுங்கிவிட்டார்.
ஆணி பிடுங்கப்பட்ட அப்பெயரே ‘சுரதா’ என்று நிலைத்தது. ”ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ” என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகளைக் கேட்ட இராசகோபாலன் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக ‘சுப்புரத்தினதாசன்’ ஆனார்.
இவர், மாநிறத்தை, ‘கறுப்பின் இளமை’ என்றார்; பல்லியை, ‘போலி உடும்பு’ என்றார்; அழுகையை, ‘கண் மீனின் பிரசவம்’ என்றார். நீர்க்குமிழிகளை, ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றார்;
வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றார். இப்படி அவருடைய கவிதைகள் அனைத்திலும் உவமைகள் வாரி இறைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரும் திருப்பு முனையை நல்கிய படம் ‘நாடோடிமன்னன்.’ இப்படத்தில் இருபாடல்கள் கவிஞருடையது.
வருக வருக வேந்தே தலையான கலைஞானம் தனைப்போற்றும் தலைவா நீ (வருக) வீரம் உறங்காத தென்னாடு தனையாளுவேந்தே நீ வருகவே பார் புகழும் உதய சூரியனே பசியின்றிப் புவிகாக்கும் பார்த்திபனே (வருக) இப்படம் 1958-ல் வெளிவந்தது. ஜிக்கி குழுவினர் பாடியதாகும்.
மற்றொரு பாடல்: புகழ்பெற்ற பாடல்: டி.எம்.சவுந்திரராசன் ஜிக்கி பாடியது. கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக்காவியக் கலையே ஓவியமே! செழுங்கனிபோல சுவைதரும் மாங்கனி என் பாடிடும் பூங்குயிலே இன்பக் காவியக்கலையே ஓவியமே (கண்ணில்) இப்பாடலின் பிற்பகுதியில்,“சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே..
எனவரும். இந்த உவமை புதியதாக உள்ளதே: இதுவரை யாரும் கேள்விப் படவில்லையே என எம்.ஜி.ஆர் வியந்துள்ளார். அப்போது, இந்த உவமை ‘குறுந்தொகை’ எனும் இலக்கியத்தில் வருகிறது.
நான் எடுத்துக் கையாண்டுள்ளேன்’ என்றார் சுரதா. சுரதாவின் இந்த அறிவு நேர்மை எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படம் எம்.ஏ. வேணு தயாரித்தது.
அப்படத்தில்ஒவ்வொரு பாடலை ஒவ்வொரு கவிஞர் எழுதினர். சுரதாவின் பாடல் அவரைப்புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அப்பாடல் இதுதான்:“அமுதும் தேனும் எதற்கு?நீஅருகினில் இருக்கையிலே எனக்கு வான் (அமுதும்)நிலவின் நிழலோ உன்வதனம் புதுநிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்மலையில் பிறவா மாமணியே நான்கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)” 1958-ல் வெளிவந்த இப்பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராசன்.
இவரதுவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் இது. ‘நாணல்’ என்ற திரைப்படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ என்று தொடங்கும் பாடலில்… ‘மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழல்’ என்று கதாநாயகன் பாடுவார். அதற்கு, ‘மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு’ என்று கதாநாயகி பதிலளிப்பார்.
காரணம், நிழலுக்கும்… இருட்டுக்கும் கவிஞர் இங்கே வேறுபாடு கண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆம், நிழல் என்பது இடம் மாறக் கூடியது. இருட்டு என்பது மண்ணில் நிரந்தரமாக தொடரக்கூடியது.
இப்படி இடம் மாறக்கூடிய நிழல் எப்படி மண்ணின் மேலாடையாக இருக்க முடியும் என்பதே கவிஞர் சொல்லும் பதில் ஆகும். இதுபோன்ற உவமைகளைக் கற்பனையுடன் கலந்து தந்தவர் சுரதா என்றால் மிகையாகாது. இதே பாடலில், பதினொன்றைக்கூட… பத்துக்கான மேலாடை என்றே வர்ணிக்கிறார்.
‘நீர்க்குமிழி’ திரைப்படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஆரம்பிக்கும் பாடலில்… வாழ்க்கையைப் பற்றி இப்படிச் சொல்லியிருப்பார். ‘பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம்!’ ஒவ்வொரு கட்டுரைகளிலும் முகவுரையும், முடிவுரையும் இருப்பதுபோல… வாழ்க்கையிலும் இதுபோன்ற உவமைகளைப் புகுத்திப் பாடல்கள் எழுதியவர் சுரதா. அந்தப் பாடலின் இறுதியில், ‘வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை!’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியிருப்பார். உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை… வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை…
அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார். கலைமாமணி, மகாகவி குமரன் ஆசான் உட்பட எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற உவமைக் கவிஞர் சுரதா, தமிழறிஞர்கள் பிறந்த ஊர்தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார்.
‘‘அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன் என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலேயே மறைந்துவிட்டார்.

