தமிழகத்தின் திருநெல்வேலிக்கு அருகில் பத்தமடை என்னும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் குப்புசாமி. பள்ளிப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தஞ்சையில் ஆங்கில முறையிலான மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அக்காலத்தில் நம் நாட்டின் மக்கள் பலர் மலேயா நாட்டில் தோட்ட வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய டாக்டர் குப்புசாமியும் சென்றார். அங்கு அவர் பெரும் புகழ் பெற்றார். அவரது பொருளாதாரமும் மேலோங்கியது.
ஒருமுறை ஒரு ஏழைத் தொழிலாளியின் மனைவிக்கு மிகவும் சிக்கலான பிரசவம் பார்க்க நேரிட்டது. இரண்டு நாட்கள் கடுமையாகப் போராடி, தாயையும் சேயையும் பத்திரமாக காப்பாற்றினார். அந்த உதவிக்கு அடையாளமாக அவர்கள் தன்னிடம் நன்றிதெரிவித்து மனமுருகிய விதம் டாக்டர். குப்புசாமி அவர்களை புரட்டிப் போட்டது.
அந்த கணமே, ”உலக உயிர்களுக்கு அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவ உதவியைக் கடந்து, ஆன்ம ரீதியிலான ஒரு பக்குவம், வழிகாட்டுதல்கள் போன்றவை தேவைப்படுகிறது.
இக்கட்டான தருணங்களைத் தாண்டிச் செல்ல, இறைவனை நோக்கி நடைபோட, ஆன்மீகம் மிகச்சிறந்த சாதனம். அதில் மேம்பட வேண்டும். தான் வெறும் மருத்துவத்திற்காக மட்டும் படைக்கப்பட்டவன் அல்ல” என தன்னுள் உணர்ந்து கொண்டார்.
அந்த கணமே அவர் பாரதம் திரும்பினார். இமயமலை ரிஷிகேசத்தில் சுவாமி விஸ்வானந்தா என்பவரிடம் சரணடைந்தார்.
அவர் டாக்டர் குப்புசாமி அவர்களின் ஞானத்தேடலையும், ஆன்ம ஒளியையும் உணர்ந்து கொண்டார். அவர்தான் டாக்டர் குப்புசாமி அவர்களுக்கு துறவிக்கான தீட்சை அளித்து ”சிவானந்த சரஸ்வதி” என திருநாமம் தந்து ஆசி வழங்கியவர்.
ஆஸ்ரமம் அமைக்க உதவியவரும் அவரே. இப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல 100 பணியாளர்களுடன் அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன. அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்.
இந்தியாவில் எந்த பிரதிபலனாக எதையும் எதிர்பாராமல் ஏழைத் தொழுநோயாளிகளை மன ரீதியாக மருத்துவ ரீதியாக, அவர்களைத் தொட்டு அரவணைத்து குணமளித்த முதல் மகான் சிவானந்த சரஸ்வதி சுவாமிகளே. இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியவரே சிவானந்த சரஸ்வதி எனும் சன்யாசிதான்.
ஆகச்சிறந்த மருத்துவர், யோககுரு, தன்னிகரற்ற தவசீலர், பலநூறு நூல்களை எழுதிய ஞானபோதகர், ஆதரவற்றோருக்கு அரவணைப்பாளர், என பன்முக கொண்ட அவரால் எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர். இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்.
இன்றும் அவரின் ஆஸ்ரம கிளைகளும், அவர் தோற்றுவித்த தெய்வநெறிக்கழமும் அவற்றை தொடர்ந்து செய்கின்றன. மிகச்சிறந்த ஞானியும் சேவகருமான சுவாமி சிவானந்தா சரஸ்வதி அவர்கள் 1963 ஜூலை 14, அன்று அவரது ஆஸ்ரமத்திலேயே மகாசமாதி அடைந்தார். சுவாமி சிவானந்தா அவர்களிடம் ஞானத்தெளிவும், ஆதரவும் கிடைக்கப்பெற்ற பல அப்துல்கலாம்கள் பாரத தேசத்தின் பெருமைகளை மேலும் உயர்த்த சேவைசெய்து கொண்டே இருக்கின்றனர்.

