செப்-5 முன்னாள் குடியரசு தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள், நாடு முழுவதும் இந்நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை குரு உத்சேவ் என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற குரலும் “தீனதயாள் உபாத்யாயாவின்” பிறந்தநாளை ஆசிரியர் தினமாக மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் இந்துத்துவா சக்திகளால் கடந்த காலத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
பெண் கல்விக்காகவும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காகவும் பல்வேறு இன்னல்களையும் எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலேவின் பிறந்தநாளான ஜனவரி-3 அன்று ஆசிரியர் தினமாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது
இது ஓரளவு பொருத்தமான கோரிக்கை. குறிப்பிட்ட சில ஜாதியினரிடம் சிக்கியிருந்த இந்திய கல்வியை அனைவருக்குமான கல்வியாக மாற்ற பல முற்போக்காளர்கள் போராடியிருக்கின்றனர்.
மதநிறுவனங்கள், மடாதிபதிகள், ஆதினங்கள்,தர்காக்கள் வழங்கிய பாகுபாடு நிறைந்த அறிவியல் சிந்தனையற்ற கல்வியை எதிர்த்து போராடி 1812ல் இந்தியாவில் முதல் பொது பள்ளியை உருவாக்கிய ராஜாராம் மோகன் ராய்,
1864ல் இந்தியாவின் முதல் அறிவியல் இதழான “டாஃப்கிர்” இதழில் அறிவியல் கல்விக்கு ஆதரவாக எழுதிய சர் சையது அகமது கான், பெண்கல்விக்காக போரடிய பண்டித ரமாபாய், பிரித்தாளும் சூழ்ச்சியை செய்த பிரிடிஷ்க்கு எதிராக இந்து முஸ்லிம் மதநல்லிணக்க கல்வியை அமுல்படுத்த போரடிய மேடம் காமா, 1857ல் இந்தியாவில் முதன்முதலில் கட்டணமில்லா மருத்துவ சாலையை நிறுவி பல உயிர்களை காப்பாற்றிய ஜாம்ஷெட்ஜி, 1885ல் சாதி மத அடையாளங்களோடும் வசதிக்கேற்ற ஆடையோடும் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்களுக்கு சமமான சீருடை கிடைக்க காரணமாயிருந்த கணேஷ் அகர்கர் , உள்ளிட்ட 23 கல்விப் போராளிகளை இப்புத்தகம் அறிமுகப்படுத்துகிறது
ஒவ்வொருவருக்கும் பல சிறப்புகள் இருக்கிறது ஆதிக்க சக்திகளால் கொலை மிரட்டல் தாக்குதல்கள், என சகல ஆபத்துகளையும் இப்போராளிகள் சந்திதுள்ளனர்.
இதில் குறிப்பிட்டுள்ள கல்விப்போராளிகள் யாரும் B.ed படித்தவர்கள் அல்ல ஆனால் இவர்கள் தான் இந்தியாவின் சிறந்த ஆசிரியர்கள் .
ஆனா இவர்களை பற்றிய குறிப்புகள் எந்த பாடப்புத்தகத்தில் இல்லாமல் செய்திருக்கும் ஒட்டு மொத்த கல்வியமைப்பை என்ன சொல்லி இழிப்பது..? ஆனாலும் வைரமுத்து சொன்னது போல் நம் ஒவ்வொருவருக்கும் ஆசான்கள் ஆயிரம்பேர்.
எழுத்தறிவித்தவர் மட்டுமல்லர் ஏர்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவரும் நம் ஆசான்தான். நியூட்டன் மட்டுமல்ல நீச்சல் கற்றுத்தந்த தலித் நண்பனும் என் ஆசான்தான். நற்றிணை மட்டுமல்ல நாட்டார்மொழி கற்றுத்தந்த பாமரனும் என் ஆசான்தான். உலகம் எனும் வகுப்பறை ஆசிரியர்களே வணங்குகிறேன் என்றே சொல்வதில் பெருமிதமே
