எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய மெகா சந்திப்பாக, 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டத்தை நாளை டெல்லியில் தொடங்குகிறது பாஜக.
தேசிய கவுன்சிலின் 2 நாள் கூட்டத்தில், பாஜகவின் இதுவரையில்லாத மெகா சந்திப்பாக இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 1995-ல் வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி அறிவித்த மும்பை தேசிய கவுன்சில் கூட்டத்தை ஒட்டிய எழுச்சியை கட்சியினர் மத்தியில் உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகள் இடைவெளியில் கட்சியினர் மத்தியில் உத்வேகம் தருவதற்கான அடுத்த சந்திப்பாக இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தை பாஜக தலைவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.
தேசத்தின் பிரதமராக தொடர்ந்து 3 முறை பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. அதற்கு இணையான சாதனையை படைக்கும் வகையில், பிரதமர் வேட்பாளராக 3-ம் முறையாக மோடியை முன்னிறுத்தி மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்க, இந்த சந்திப்பை பாஜக திட்டமிட்டுள்ளது. சனி, ஞாயிறு என 2 நாள் நடைபெறும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தை அதன் தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார். இரண்டாம் நாள் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
தேசமெங்கும் இருந்து இந்த கூட்டத்தில் 11,500 பாஜக பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். முன்னதாக 2014 மற்றும் 2019 தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டங்களில் சுமார் 3000 பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். மாறாக இம்முறை அதனை விட பல மடங்கு அதிகமான கட்சியினருடன் பிரம்மாண்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாரத் மண்டப்பத்தில் இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.இதன் பின்னணியில் 370 இடங்களில் பாஜகவின் வெற்றியை பிரம்மாணடமாக அடைய வேண்டும் என்ற இலக்கும் அடங்கியிருக்கிறது. பாஜக அரசின் சாதனைகள், அடைந்த இலக்குகள் உள்ளிட்டவற்றை வாக்களர்கள் வரை கொண்டு செல்வதற்கான தொடக்கமாக இந்த கூட்டம் அமைய இருக்கிறது. 2014 மற்றும் 2019 பொதுத்தேர்தல்களிலும், பாஜகவின் வெற்றிமுகத்துக்கான உற்சாகம் இதே போன்ற தேசிய கவுன்சில் கூட்டத்தை அடுத்தே கட்சியினர் மத்தியில் எழுந்தது. அதன் அடிப்படையில் நாளை தொடங்கும் மெகா சந்திப்புக்கும் திடமாக திட்டமிடப்பட்டுள்ளது.

