தீபாவளி பண்டிகையொட்டி, கடந்த மாதம் தொடங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக, இதுவரை 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் உத்தரவின்பேரில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், எனது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, உரிய அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி, பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் தொடங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக, இதுவரை (நேற்றைய நிலவரப்படி) 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் தங்களின் வசதியான பயணத்துக்கு முன்பதிவு செய்துகொண்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 1-ந்தேதி (நாளை) முதல் 3-ந்தேதி வரை, தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 3 ஆயிரத்து 506 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 806 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6 ஆயிரத்து 734 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 540 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக தீபாவளி பண்டிகையையொட்டி தினசரி பஸ்கள், சிறப்பு பஸ்கள் என 34 ஆயிரத்து 259 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 4 ஆயிரத்து 319 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17 ஆயிரத்து 719 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்துள்ள பஸ்கள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044-24749002, 1800425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக்கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

