Skip to main content

தமிழகம் முழுவதும் கன மழை -மக்களுக்கு இடையூறின்றி பஸ் சேவைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து இருந்த தியாகராயநகர், மந்தைவெளி பணிமனை மற்றும் பட்டினப்பாக்கம், தியாகராயநகர் பஸ் நிலையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
 
ஆய்வு முடிந்த பின்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 31 பணிமனைகள் சென்னையில் உள்ளன. இந்த 31 பணிமனைகளில் மந்தைவெளி மற்றும் தியாகராயநகர் ஆகிய 2 பணிமனைகளில் மட்டுமே மழைநீர் தேங்கி இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து, இந்த 2 பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டேன். அதில் மந்தைவெளி பணிமனையில் மழைநீரானது முழுவதுமாக அகற்றப்பட்டு உள்ளது. தியாகராயநகர் பணிமனையில் மழைநீரினை மின்மோட்டார் மூலம் உடனடியாக அகற்றிடும் பணி நடந்து வருகிறது. இந்த மழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் 17 ஆயிரத்து 576 பஸ்கள் பொது மக்களுக்கு இடையூறு இன்றி இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.