பிரசவத்திற்கு உதவிய அய்யனார் – புலியை கல்லாக மாற்றிய தலைமலை அய்யனார் அற்புதம்!
நெல்லை மாவட்டம் கடையம் அருகே ராமநதி ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் “தலைமலை அய்யனார்”, தன் பக்தர்களுக்காக எளிய உருவெடுத்து வந்து காக்கும் கருணைக் கடல். அந்த ஐயனின் சிலிர்க்க வைக்கும் வரலாற்றை இன்று காண்போம்.

கர்ப்பிணிக்கு உதவிய கருணைக் கடல் :
ஒருமுறை விறகு பொறுக்க வந்த ஒரு நிறை மாத கர்ப்பிணிப் பெண், இடியுடன் கூடிய பலத்த மழையில் சிக்கிக்கொண்டார்.
மழையிலிருந்து தப்பிக்க அவர் தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்குள் ஒதுங்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
ஒரு ஆணாக தான் உள்ளே இருப்பது அந்தப் பெண்ணுக்கு அசௌகரியத்தைத் தரும் என்று எண்ணிய அய்யனார், கொட்டும் மழையில் கருவறையை விட்டு வெளியேறி பெண்ணுக்கு பாதுகாப்பாக நின்றார்.

கல்லாக மாறிய கடுவாய் புலி!
அய்யனார் வெளியேறிய சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது குழந்தையின் ரத்த வாடையை நுகர்ந்து வந்த ஒரு கொடிய கடுவாய் புலி, தாயையும் குழந்தையையும் தாக்க முயன்றது.
அந்தப் பெண் அலறியதும், தன் பக்தையைக் காக்க அய்யனார் அந்தப் புலியை அங்கேயே கல்லாக மாறும்படி சபித்தார்.
அந்த அதிசயப் புலிச் சிலையை இன்றும் நாம் ஆலயத்தில் காணலாம்.

ராமபிரான் வழிபட்ட திருத்தலம் :
பொதிகை மலைக்கு வந்த அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த அய்யனாரை, சீதையைத் தேடி வந்த ராமபிரானும், லட்சுமணனும் வழிபட்டுள்ளனர்.
ராவணனை வெல்ல அகத்தியர் ராமனுக்கு அம்பு வழங்கி ஆசிர்வதித்ததும் இந்தத் தலத்தில்தான்.
மழை தரும் வருண தேவன்!
இப்பகுதியில் மழை பொய்த்தால், அய்யனாருக்கு வருண ஜெபம் செய்து அபிஷேகம் செய்தால் உடனடியாக மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அய்யனாருக்கு மணிகளைச் செய்து கட்டித் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், கடையம் – ராமநதி அணைப் பகுதி.
குறிப்பு: அணை வரை வாகனங்கள் செல்லும், அங்கிருந்து 1 கி.மீ தூரம் நடந்துதான் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
இந்த அதிசய கோவிலுக்கு சென்று வாருங்கள்.. அந்தத் தலைமலை அய்யனின் அருளைப் பெறுங்கள்!
அறந்தாங்கி சங்கர்
9080488624


