இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஒளிப்பதிவாளர், இயக்குநர் தங்கர்பச்சான், ”கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்குமுறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல்கொடுக்கும் தமிழன் கௌதமன்.
தமிழர் அல்லாதவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் அறிந்து கொண்டு தமிழர்களிடையே பாகுபாட்டை, விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள். சமூக வலைதளங்களில் கமெண்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் ஏராளமான மனநோயாளிகள் வலம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு அரசியல் கட்சியின் கொத்தடிமைகளாக கைக்கூலிகளாக இருக்கிறார்கள்.
மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர். 1990களில் இந்திய சினிமாவில் வணிக எல்லைக்குள் நின்று கொண்டு ஆக சிறந்த படைப்பாக வெளியானது மறுமலர்ச்சி. அதில் நான் பணியாற்றிருக்கிறேன். யாருக்குள்ளும் எந்த பகைமையும் இல்லாமல் மனிதர்களையும், மக்களையும், பெண்களையும், மதிக்கிற ஒரு தலைவனை பற்றிய படம்.
இந்தத் திரைப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்த வில்லை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்குப் பிடித்த மக்கள் தலைவனை பற்றி படம் எடுத்தால். அது சாதி படம் என்று குறிப்பிடக்கூடாது. இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்” என்றார்.

