Saturday, March 21, 2026
Homeசினிமாசாதனைப் படைத்த "சரஸ்வதி சபதம்" ரிலீஸான நாள்!

சாதனைப் படைத்த “சரஸ்வதி சபதம்” ரிலீஸான நாள்!

தமிழ் சினிமாவில் புராணக் கதைகளுக்குத் தனி ரசிகர் கூட்டமுண்டு. திருவிளையாடல், கந்தன் கருணை, திருமால் பெருமை உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இதற்கு உதாரண மாகக் கூற முடியும். அதில் ஒன்றுதான் ‘சரஸ்வதி சபதம்’. 

ஏ.பி.நாகராஜன் இயக்கிய இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘திருவிளையாடல்’ படத்தில் நக்கீரனாக வந்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சொல்வாரே, அவர்தான் ஏ.பி.நாகராஜன்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் எப்படி முப்பெரும் தேவர்களோ, அதே போல், அவர்களது துணைவியர்களான சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி ஆகியோர் முப்பெரும் தேவிகள். சரஸ்வதி கல்விக்கு உடையவள், லெட்சுமி செல்வத்திற்கு உடையவள், பார்வதி வீரத்திற்கு உடையவள் என்கிறது வழிபாட்டு முறை.  அந்த முப்பெரும் தேவிகளுக்குள் போட்டி வந்தால், மோதல் வந்தால் என்ன ஆகும், என்ன நடக்கும் என்பதை புராண காவியமாக கூறியிருக்கும் படம் தான், சரஸ்வதி சபதம். கல்வியா? செல்வமா? வீரமா? உலகில் எது உயர்ந்தது, என்கிற போட்டி முப்பெரும் தேவிகளுக்குள் வர,பூமிக்கு வரும் அவர்கள், வாய் பேச முடியாதவரை புலமை பெற்றவராக மாற்றுவது, பிச்சையெடுப்பவரை ராணி ஆக்குவது, கோழையை மாவீரன் ஆக்குவது என மூன்று வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபடும் முப்பெரும் தேவிகள், அதற்காக மேற்கொள்ளும் திருவிளையாடலும் தான் கதை.

Saraswathy sabatham

கல்வி அவசியம். செழிப்புடன் இருக்க செல்வமும் அவசியம். கல்வியும் செல்வமும் களவாடாமல் இருக்க நம் தேசத்தைக் காக்க வீரமும் முக்கியம். எனவே மூன்றும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என போதித்திருப்பார் ஏ.பி.நாகராஜன். அதேவேளையில், படத்தில் டைட்டில் போடப்படும் போது, டைட்டில் முழுக்க கீழே வீணை இருக்கும். சரஸ்வதி, மகாலக்ஷ்மி, பார்வதிதேவி மூவரும் சபதம் எடுத்தாலும் ‘சரஸ்வதி சபதம்’ என்றுதான் படத்துக்கே பெயர் வைத்திருக்கிறார். எனவே கல்வியின் மகத்துவத்துக்கே முக்கியத்துவம் தந்திருப்பார் ஏ.பி.என்.

சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் கலைஞனுக்கு பெருந்தீனி போட்ட படம். நடிகையர் திலகம் சாவித்திரி, கே.ஆர்.விஜயா என பெரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கதையோடு பயணித்து படத்தை பலமாக்கியிருப்பர். கே.வி.மகாதேவனின் இசையில் அத்தனை பாடல்களும், இன்றும் சூப்பர் டூப்பர் ஹிட். அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார். 

Saraswathy sabatham

ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில், ஏ.பி.நாகராஜன் தயாரித்து, இயக்கிய இத்திரைப்படம், 1966 ம் ஆண்டு செப்டம்பர் 3 ம் தேதி இதே நாளில் வெளியாகி, வெள்ளித்திரையில் வசூல் சாதனை படைச்சுது.. கோயில் திருவிழா, கொடை காலங்களில் ஒலிப்பெருக்கியில் இந்தப் படத்தின் வசனத்தைத்தான் ஒலிபரப்புவார்கள். 50 வயதைத் தாண்டிய பலருக்கு இதன் வசனங்கள் மனப்பாடமாகவே ஆகியிருக்கும்.

‛அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி…’
‛தெய்வம் இருப்பது எங்கே… அது இங்கே… வேறு எங்கே’
‛கல்வியா செல்வமா வீரமா… ஒன்றில்லாமல் மற்றொன்று…’
‛கோமாதா எங்கள் குலமாதா…’
‛ராணி மகாராணி… ராஜ்ஜியத்தின் ராணி…’
‛தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…’
‛உருவத்தை காட்டிடும் கண்ணாடி…’
இந்த பாடல்கள் அனைத்துமே, சரஸ்வதி சபதத்தின் மெகா வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைஞ்சுது

Saraswathy sabatham

1966  இதே செப்டம்பர் 3-ம் தேதி வெளியானது ‘சரஸ்வதி சபதம்’. படம் வெளியாகி 59 வருடங்களாகி போச்சு. 

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் புராண நாயகன் ஏ.பி.நாகராஜனையும், காவிய நாயகன் சிவாஜி கணேசனையும், இவர்கள் இணைந்து படைத்திட்ட ‘சரஸ்வதி சபதம்’ படத்தையும் மறக்கவே முடியாது என்பதை சபதம் போட்டுச் சொல்லலாம்!.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments