உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய் ;
வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.
*
பொருள் :
மதம் சொரிகின்ற பலம் வாய்ந்த யானைகளைச் செலுத்தும் வலிமை உள்ளவனும், புறமுதுகு காட்டாத தோள் வலிமை உள்ளவனுமான நந்தகோபனது மருமகளே! நப்பின்னையே! மணம் வீசும் கூந்தல் உடையவளே! நீ வந்து கதவைத் திறப்பாயாக |
பொழுது விடிவதற்கு அடையாளமாகக் கோழிகள் கூவுகின்றன. குருக்கத்தி மலர்ப் பந்தலின் மேல் உள்ள குயில்களும் கூவுகின்றன.
பந்தைத் தாங்கிய விரல்களை உடையவளே!
உன் கணவன் கண்ணன் பேரைப் பாட, அழகிய தாமரை போல சிவந்த உனது திருக்கைகளில் வளையல் ஒலி செய்ய, நடந்து வந்து கதவைத் திறவாய் !

