திருப்பூரில் புதுமணப்பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ரிதன்யா, தற்கொலை செய்து கொண்ட விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், தற்போது அதேபோல் அடுத்த ஒரு சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது. திருவள்ளூரில் திருமணமான நான்காவது நாளே லோகேஸ்வரி என்ற மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான முதல் நாளிலிருந்து ஒரு பவுன் நகைக்காகவும், ஏசி வேண்டும் என்று கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் லோகேஸ்வரி. 22 வயதான லோகேஸ்வரி பிஏ பட்டதாரி. அவருக்கும் பன்னீர் என்பவருக்கும் கடந்த 27 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்ததும் மறு வீட்டிற்காக லோகேஸ்வரி கணவருடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை வந்துள்ளார். அன்று இரவு உணவு விருந்து முடிந்த பிறகு அனைவரும் உறங்கச் சென்று விட்டனர். அப்போது பாத்ரூமிற்கு சென்ற லோகேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அவரது அப்பா கஜேந்திரன் கதவைத் தட்டி பார்த்துள்ளார். ஆனால் எந்த ஒரு பதிலையும் லோகேஸ்வரி கூறாததால், பதறிப்போன அப்பா கதவை உடைத்துள்ளார். அங்கு தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அனைவரும் எழுந்து ஓடி வந்துள்ளனர். லோகேஸ்வரி சடலமாக இருப்பதை பார்த்த அனைவரும் உறைந்து போன நிலையில், கஜேந்திரன் பொன்னேரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில்.”எனது மகளுக்கும் காட்டாவூரை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்தது. 4 சவரன் நகை, பைக், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்தோம். திருமணம் முடித்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தியுள்ளனர். எனது மகளின் செல்போனை பறித்து வைத்துள்ளனர்.மேலும் மீதம் தரவேண்டிய ஒரு சவரன் நகை, ஏ.சி. வீட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.இருவரையும் சமாதானம் செய்தோம். எனது மகளின் சாவுக்கு பன்னீர் மற்றும் அவரது குடுபத்தினர் தான் காரணம்.”இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த விவகாரத்தில் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை காரணமாக அடுத்தடுத்து ஏற்படும் தற்கொலை சம்பவம் பார்ப்போர் நெஞ்சை உறைய வைக்கின்றது.

