இன்று ஒரு நண்பர் வாட்ஸப்பில் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார்.
சென்னை தி.நகரில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு தனியார் ஓட்டல். அந்த ஓட்டலில் ”ஒரு சாப்பாடு ரூ.40 மட்டுமே!” என்று அறிவித்திருக்கிறார்களாம். அதை வாங்குவதற்காக மக்களின் அணிவகுப்பு அரை கிலோமீட்டர் இருக்கக் கூடும்!
இதேபோல் கோவையில் ஒரு சம்பவம். உணவுத்திருவிழா என்கிற பெயரில் முன்கூட்டியே பணத்தைக் கட்டிவிட்டு, பயங்கரமான தள்ளுமுள்ளு, வாய்த் தகராறு போன்றவை நடந்ததாக செய்தி வந்தது. இதுபோல இன்னும் பல செய்திகள்!
சென்னை அன்ணாநகர் பகுதியில் விடியற்காலை 3 மணிக்குக்கூட பிரியாணிக்கடையில் மக்கள் நெருக்கடி!
மெரீனா பீச், பெசண்ட் நகர் பீச்சிலும் இப்படித்தான்! பொதுவாக சென்னையின் பிரதானமான பகுதிகளில் இதுவேதான் அன்றாட நிகழ்வு! மற்ற ஊர்களிலும் கூட இந்த கலாச்சாரம் பல்கிப்பெருகிவிட்டதாகவே எண்ணுகிறேன்.
எல்லா குடும்பங்களிலும் ஓட்டலுக்குப்போய் ஒருநாளாவாது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பது நிச்சயம் ஒரு கனவாக இருக்கும். நானும் தவிர்க்க முடியாத நேரங்களில் குடும்பத்துடன் சென்று சாப்பிட்டுள்ளேன். இல்லையென்று கூறவில்லை. நான் சொல்ல வரும் பிரச்சினை அதுவல்ல.
நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழப்பு செய்தது. அப்போது வங்கிகளின் வாசலில் மக்கள் நெருக்கடி அதிகரித்து, க்யூ வரிசையில் நிற்க நேரிட்டபோது பலரும் வெகுவாக சலித்துக்கொண்டனர். நம் நாட்டின் நலனுக்காகத்தான் அந்த முடிவு என்பதை அவர்கள் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. தீய பின்னணி கொண்ட ஊடகங்கள் அவர்களுக்கு தூபம் போட்டு, மக்களை மேலும் பொங்க வைத்தன!
சுதந்திர தின, குடியரசு தின அணிவகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்போது வசதி வாய்ப்பு மிக்கவர்கள் எத்தனைபேர் அணிவகுப்பைப் பார்வையிட்டு போலீஸ் துறையையும், காவல் துறையையும் உற்சாகப்படுத்தினர்?
தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்காக ஒரு மணிநேரம் வரிசையில் நின்று வாக்களிக்க பலருக்கும் மனம் இருப்பதில்லையே… வாக்களிக்காமலேயே விடுமுறையை மட்டும் தொலைக்காட்சி முன்பாகவும், வேறு ஊர்களுக்குப் பயணப்படுவதாகவும் மக்கள் தங்கள் நிகழ்ச்சிநிரலை அமைத்துக்கொள்கிறார்களே! இவையெல்லாம் என்ன வகையான மனோபாவம் என்றே தெரியவில்லை!
பொதுவாக தொண்டைக்கும் கீழே போய்விட்டால் அப்புறம் அது ”வேற!” என்கிற ஒரு சொலவடை நம் நாட்டில் உண்டு! அதுதான் இப்போது நினைவிற்கு வருகிறது.
”கல்வியறிவில் உச்சத்திற்கு போய்விட்டோம்” என்பது நாகரீக மனிதர்கள்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர். ஆனால், கலாச்சாரத்தில் மிகவும் பின் தங்கிவிட்டனர் என்பதே வேதனை!
அதிகப்படியான வாழ்க்கை சுதந்திரம், அதிகப்படியான கருத்து சுதந்திரம் அனைத்துமே பொறுப்பற்ற தன்மைக்கு வழிவகுத்து, நாட்டை படுகுழியில் தள்ளிவிடும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
மு.பழனிவாசன்

