மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட மதுரை போடி வழித்தளத்தில் சமீபத்தில் 4 வாலிபர்கள் போடி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் தங்களது மோட்டார் சைக்கிள் மூலம் சாகசம் செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த ரயில்வே பணியாளர்கள் அவர்களை தட்டி கேட்டவுடன் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ரயில்வே பணியாளர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மதுரை ரயில்வே போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
அதன் பிறகு அந்த வாலிபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் ரயில்வே தண்டவாளப்பகுதியில் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். ஒருவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த கணேசன் மகன் ஈஸ்வரன் சுப்புராஜ் நகர் புது காலடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மணிகண்டன் ஜெயம் நகரை சேர்ந்த கந்தசாமி மகன் தங்கப்பாண்டி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

