தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 8,21,105 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர்; இதில் மாணவிகள் 96.47 சதவீதமும், மாணவர்கள் 92.15 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை (97.54%), தஞ்சை (97.41%), திருச்சி (97.31%), மற்றும் கன்னியாகுமரி (97.30%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பாட வாரியான தேர்ச்சியில் இந்த ஆண்டு ஆங்கிலப் பாடத்தில் அதிகபட்சமாக 99.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழ் (98.43%), அறிவியல் (98.00%), சமூக அறிவியல் (97.93%) மற்றும் கணிதம் (97.36%) ஆகிய பாடங்கள் அதற்கு அடுத்தபடியாக நல்ல தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
மேலும், தமிழக மின் ஆளுமை முகமையின் உதவியுடன் இந்த ஆண்டு முதன்முறையாக 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று குறுஞ்செய்தி அனுப்பி தேர்வு முடிவுகளைத் தங்கு தடையின்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இந்தச் சூழலில் ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது ஆலோசனைகள் தேவைப்பட்டாலோ, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற அரசின் இலவச உதவி எண்களைத் தொடர்புகொண்டு தகுந்த வழிகாட்டுதல்களைப் பெறலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

