‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில், கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது.
இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதுவரை கதையைப் பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதால், படத்தின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரங்களின் உறவுகள் குறித்து ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 20, இந்த உலகத்துக்குள் முதல் நெருக்கமான பார்வை கிடைக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. கதையின் தாக்கத்தை காக்கும் வகையில், டீசர் ஒரே மொழியில் வெளியிடப்படவுள்ளது. இதனால் படத்தின் அழுத்தமான காட்சிகளும் சூழலும் தான் நேரடியாக ரசிகர்களிடம் பேசும்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பின் ஒரு பகுதி, கவனமாக வெளியிடப்பட்ட நட்சத்திர பட்டாள அறிவிப்பிலிருந்து உருவானது. கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

