மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் 2025 தேர்வுப் பதிப்பில், ஏழை எளிய பொதுப் பிரிவினருக்காகக் கொண்டு வரப்பட்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டைப் பெரும் பணக்காரர்கள் அப்பட்டமாகத் துஷ்பிரயோகம் செய்துள்ள அதிர்ச்சித் தகவல் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்தியப் புலனாய்வு விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆண்டுக்குக் குடும்ப வருமானம் (தனிநபர் வருமானம் அல்ல) ₹8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்ட இந்த இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் 104 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பின்னணி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன.
இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர் பதவிகளைப் பிடித்தவர்களில் பலர் பெரிய தொழிலதிபர்களின் பிள்ளைகள், ஐஐடி (IIT) பட்டதாரிகள் மற்றும் ஆண்டுக்கு ₹1 லட்சத்திற்கும் அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் விலையுயர்ந்த தனியார் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆவர்; அதிலும் குறிப்பாக, இதில் தேர்வு பெற்றவர்களில் 64.4 விழுக்காட்டினர் அதிகக் கட்டணம் வசூலிக்கும் சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றவர்கள், 44.4 விழுக்காட்டினர் தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள், 26.9 விழுக்காட்டினரின் பெற்றோர்கள் சொந்தமாகத் தொழில் நடத்துபவர்கள் மற்றும் 9.6 விழுக்காட்டினர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே வியக்கத்தக்க வகையில் தங்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவு என சான்றிதழ் பெற்று இந்தச் சலுகையை அனுபவித்துள்ளனர்.
இந்த மோசடியானது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முறையான சரிபார்ப்பு மற்றும் தணிக்கை இல்லாத மெத்தனப் போக்கை அப்பட்டமாகக் காட்டுவதோடு, தங்களின் உன்னதமான அரசுப் பணியின் தொடக்கத்தையே இத்தகைய மோசடி மற்றும் முறைகேடுகள் மூலம் தொடங்கும் இந்த வருங்கால அதிகாரிகள், பிற்காலத்தில் மக்களுக்கு எப்படி நியாயத்தையும் நீதியையும் வழங்குவார்கள் என்ற மிக முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.
தர்மத்தைப் போல நேர்மையும் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற நிலையில், தகுதியுடைய ஏழை எளிய மாணவர்களின் வாழ்வாதாரத்தையும் உரிமையையும் பறிக்கும் வகையில், வசதி படைத்த வருங்கால அதிகாரிகள் செய்யும் இந்த சுயநல மோசடியே சிவில் சர்வீஸ் துறையில் லஞ்சமும் ஊழலும் மலிந்து போவதற்குக் காரணமாக அமைகிறது என்ற வேதனையான உண்மையை இப்புலனாய்வு நமக்கு உணர்த்துகிறது.

