ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி தங்கள் வல்லரசை பாரதத்தில் காலூன்றச்செய்ய கடைப்பிடித்த நயவஞ்சகங்களும், சாதுர்யங்களும் வரலாற்றில் எத்தனை எத்தனையோ… அப்படிப்பட்ட பல சம்பவங்களில் ஒன்றுதான் இங்கே காண இருப்பது. தென்தமிழகத்தில் பாரம்பரியப்பெருமைகளுடன் விளங்கிய இராமநாதபுரம் சீமையின் மன்னராக விளங்கியவர் 1762 –ல் கோலோச்சத் தொடங்கியவர் விஜயரகுநாத சேதுபதி. ஆனால், காலத்தின் கோலம் அப்பகுதி ஆற்காடு நவாப்பின் ஆளுமையின் கீழ் விளங்கியது.
1795 –ல் இராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழகத்தில் வரிவசூல் செய்யும் உரிமையினை ஆற்காடு நவாபிடமிருந்து ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. இவ்வுரிமையைப் பெற்ற உடனே எந்தவிதமான வெளிப்படையான காரணங்களுமின்றி, ஆங்கிலேய அரசிற்கு எதிராக கிளர்ச்சிசெய்தவர் என்கிற காரணத்தை ஒப்புக்குச் சப்பாக சொல்லி மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி அவர்களை கைதுசெய்தனர்.

