Wednesday, March 25, 2026
HomeUncategorizedவரதட்சணையைப் பதிவு செய்க!- சிறப்பு கட்டுரை!

வரதட்சணையைப் பதிவு செய்க!- சிறப்பு கட்டுரை!

”வரதட்சணைக்காக தற்கொலை.. வரதட்சணையால் தற்கொலை..” என்பதெல்லாம் 21  ஆம் நூற்றாண்டில் எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் என்பதை சமூகம் இன்னும் உணரவே இல்லை.

    கொங்கு மண்டலத்தில் ரிதன்யா என்ற பெண் தன் காருக்குள்ளேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதை அறிவித்து, எல்லா ஊடகங்களும் “உச்”கொட்டுகின்றன! அதைப் பார்க்கும், படிக்கும் அனைத்து தரப்பினரும் சில நாட்களில் அடுத்துவரவிருக்கும் பரபரப்பான செய்திக்கு தாவிவிடுவர்! இதுதானே இத்தனை காலமாக நடக்கிறது! 

படிப்பறிவில் முன்னேறிய மாநிலம், ஜிடிபியில் உச்சமான மாநிலம், கீழடி பெருமைகளைச் சொல்லி மார்தட்டிக்கொண்டு மல்லுக் கட்டும் மாநிலம், சாதிகளை ஒழித்துவிட்டதாக சவடால் பேசும் மாநிலம், இனத்தின் அடையாளங்களைச் சொல்லியே அசைக்கவோ, ஆட்டவோ முடியாது என ஆணவமாய்ப் பேசும் மாநிலம்.. இப்படி பல்வேறு பெருமைகளால் அலங்கரிக்கப்பட்ட மாநிலம் தமிழகம்! ஆனால், வரதட்சணைக்கொடுமையால் நிகழும் கொலைகள், தற்கொலைகள், விவாகரத்துகள் போன்றவை அதிகம் நிகழும் மாநிலம் என்று அறிவிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது. 

மக்கள் அவரவர் பொருளாதாரத் தகுதிக்கு ஏற்றவாறு அல்லது அதற்கும் மேலாகவே வரதட்சணை நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு 3 பவுன் போடுவதே அதிகம் என்கிற நிலையில் உள்ள குடும்பம் திருமணம் செய்துகொடுத்தபின், கூடுதலாக ஏதோ ஒரு வகையில் வரதட்சணை கேட்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. 

பெண் வீட்டாரிடம் ”இது ரொம்ப கம்மிங்க! நாங்க எங்க பொண்ணுக்கு 50 பவுன் போட்டோம். அதனால கொறைஞ்சது 35 பவுனாவது போட்டா பரவாயில்ல..” என்று கூறுவது, 

வரதட்சணை குறைவு என்று தோன்றிவிட்டால், அமோகமாக பொருந்திவரும் ஜாதகத்தைக்கூட ”பொருந்தவில்லை” என பொய்கூறி கழித்துவிட்டுச் செல்வது,

பெண் வீட்டாரிடம் பிற்காலத்தில் ”எவ்வளவு சொத்து தேறும்?” என்று கணக்கிட்டு வைத்துக் கொள்வது, இப்படி எத்தனையோ பேர்! 

”90’ஸ் கிட்ஸ்களுக்கு (மணமகன்கள்) திருமணம் நடப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறதே”… என்று அங்கலாய்த்துக்கொள்பவர்கள், 

”பொண்ணுங்க ரொம்ப பேராசை புடிச்சதுங்களா இருக்குதுங்க”

“பொண்ணு குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவாளான்னு சந்தேகமா இருக்கு”

“கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு வேலைக்குப்போனாதான் நல்லது. அப்பதான் புருஷன் பொண்டாட்டி வாழ்க்கை வசதியா இருக்கும். எங்களுக்கு ஒன்ணும் கொடுக்க வேணாம்.” என்று கூறிவிட்டு ஹவுஸிங் லோன், வியாபரத்திற்காக வாங்கிய கடன்கள், காருக்கான தவணை ஆகியவற்றிற்காக மருமகள் தொகைக்காக சப்புக்கொட்டுவோராக உள்ளனர். 

பெரும்பாலும் 90’ஸ் கிட்ஸ் (மணமகன்கள்) வாழ்க்கையை அவர்களின் பெற்றோர்களே நாசமாக்குகிறார்கள் என்பேன் !

தங்கள் ஆசைக்கு ஏற்ப சுருட்டியவர்கள் ஆசுவாசமாக இருக்கிறார்கள். அதிலும் திருப்தி அடையாத பணத்தாசைப் பேய்கள் பெண்களை தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். அல்லது அவர்களே களமிறங்கி அந்த பெண்களின் கதையை முடிக்கிறார்கள். அது கிடைக்கப் பெறாதவர்கள் பெண்களையும், பெண் வீட்டாரையும் குறைப்பட்டுக் கொள்கின்றனர். 

தங்கள் வசதிக்கேற்ப, பையனின் நிறத்திற்கேற்ப, பையனின் சம்பளத்திற்கு ஏற்ப மணமகளிடம் வரதட்சனையை எதிர்பார்ப்பவர்கள், பெண்களின் எதிர்பார்ப்புகளை மட்டும் கேவலமாக பேசுவது ஏன்? பெண் கற்போடு வாழ வேண்டும், கல்வியறிவு கொண்டிருக்க வேண்டும், அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும், அழகியாக இருக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சம்பளத்தை அப்படியே தன் மாமனார், மாமியாரிடம் தந்துவிட வேண்டும், கலாச்சாரப்படி திருமணத்திற்குப்பின் கடைசிவரை சீர் செனத்திகள் செய்துகொண்டே இருக்க வேண்டும்… இவையெல்லாம் மணமகன் வீட்டாரிடம் உள்ள எளிய எதிர்பார்ப்புகள்! 

யாரிடமும் ”பருவத்தே பயிர் செய்” என்கிற மனோபாவம் திருமண விஷயத்தில் இல்லாமல் போனது. ”பணம் செய்” என்பது மட்டுமே பிரதானம்! 

இனி செய்ய வேண்டியவை எவை?

திருமணம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளும்பொழுது, நகை, சொத்து பரிமாற்றம், ஆகிய அனைத்தும் இனி மகளிர் நலன் துறையுடன் ஒருங்கிணத்து, பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட வேண்டும். 

பதிவு மேற்கொள்ளப்படும்போது வரதட்சணை பெறுகின்ற மணமகன் வீட்டார் பதிவுக்கட்டணத்தை செலுத்தச் செய்ய வேண்டும்.  
விவரங்கள் அனைத்தும் வருமானவரி இலாகாவில் பதிவு செய்யப்பட வேண்டும். 

ஒருவேளை விவாகரத்து ஆகுமானால் இதையே பின்பற்றி அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இவைபோன்ற அம்சங்கள் கேலிக்கூத்தாக தெரியலாம். ஆனால் இது அவசியம். 

நம் நாடு தங்கத்திற்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. இந்தியாவில் பிரம்மாண்டமான நகை ஷோரூம்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். முகூர்த்த காலம், பண்டிகைக்காலம் என்றில்லாமல் ஆண்டுமுழுவதுமே தங்கத்தின் விற்பனை தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் நடுத்தரம், அதற்கும் கீழே என்றெல்லாம் கூறுபவர்கள் கூட நகைகளை வாங்கி குவிக்கத்தான் செய்கிறார்கள். வெறும் சேமிப்பிற்காக இல்லாமல், பெரும்பாலும் பெண் பிள்ளைகளின் திருமணத்தின்போது செய்யும் வரதட்சணைக்காகத்தான் என்பது கண்கூடு. 

ஆக, திருமணம் கலாச்சாரம் சார்ந்திருப்பினும், அதை முடிவு செய்வதில் வணிகப்பரிமாற்றம் போல் அனைத்தும் “கருப்புச் சொத்தாகவே” கைமாறுகின்றன. இதனால் நாட்டுக்கு என்ன பயன்? 

ஆனால்”இப்படியெல்லாம் செய்தால் முழுமையாக மாற்றம் நிகழுமா?” என்றால் ”முடியாது” என்றே சொல்ல முடியும். ஆனால், ஓரளவு கட்டுப்படத் தொடங்கும். 

நான் பார்த்த வகையில் மதம் விட்டு மதம், சாதி விட்டு சாதி என்று நடக்கும் காதல் திருமணங்களில் கூட வரதட்சணை என்பது கட்டாயமாகி விட்டது. அந்தகாதலுக்கு ஏது புனிதம்? 

பொருளாதாரம் சார்ந்தே திருமண வைபவங்கள் நிகழும் ஒரு மாநிலத்தில் அரசிற்கு வருவாய் ஈட்டும் விதத்திலும், பெண்களின் சொத்துக்கான பாதுகாப்பும் தரும்வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் 30 நாட்களுக்குள் தண்டிக்கப்பட வேண்டும். பெண்குழந்தைகளும் வரதட்சணையை அதிகமாக கேட்கிற மணமகனைப் புறக்கணிக்க வேண்டும். 

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், ”பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை” என்கிற பெயரில், மணமகளிடமிருந்து தன் வீட்டார் தனக்கு எவ்வளவு வரதட்சணை எதிர்பார்க்கிறார்கள்? என்று தெரியாமலேயே பெரும்பாலான மணமகன்கள் திரிகிறார்கள்! 
ஆனால், அவனது பெற்றோர், “அந்த பொண்ணு  உனக்கு ஒத்து வராது.. உனக்கென்ன ராசா குறைச்சல்..” என்று போலி வாக்குமூலம் தருகிறார்கள். 

காலகிரமத்தில் இதற்கு ஒரு தீர்வு காணவிழையவில்லையெனில், மேலும் பல ரிதன்யாக்களின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். பெண்கல்வி முன்னேற்றம், அவர்களின் வேலை வாய்ப்பினால் வருமானம், நல்லொழுக்கம் ஆகிய அனைத்தையும் கடந்து வரதட்சணைப் பேய் சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது.

தினமும் வரதட்சணையால் செத்துக்கொண்டிருக்கும், செத்துச்செத்து பிழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் எனது அனுதாபங்கள்.. 

மு.பழனிவாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments