தென்னிந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி (88) பெங்களூருவில் காலமானார். ‘தியாகய்யா’ தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையிசைக்கு அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.
தமிழில் 1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கல்யாணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘தேவதாஸ்’ படத்தில் ‘ஓ தேவதாஸ்’, ‘வளையாபதி’ படத்தில் டி.எம்.செளந்தர்ராஜனுடன் ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’, ‘குலேபகாவலி’யில் ‘ஆசையும் என் நேசமும்’ மற்றும் ‘மகாதேவி’யில் ‘சிங்காரப் புன்னகை’ உள்ளிட்ட எண்ணற்ற அமரத்துவம் பெற்ற பாடல்களைத் தந்தவர். தனித்துவமான, வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரரான இவர் நாடோடி, கிராமிய மற்றும் விடுதி நடனப் பாடல்களுக்குத் தனது குரலால் பெரும் உயிர் கொடுத்தவர்.
‘ஆசையும் என் நேசமும்’, ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’, ‘காளை வயசு கட்டான சைசு’, ‘யாரடி நீ மோகினி’, ‘குங்குமப்பூவே கொஞ்சு புறாவே’, ‘மாமா மாமா மாமா’, ‘செந்தமிழ் தேன் மொழியாள்’, ‘அத்திக்காய் காய் காய்’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி முத்திரை பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு இசைப்பிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

