Wednesday, February 4, 2026
HomeUncategorizedஊழல் ஆட்சியைத் திருத்திய பெருமாள்!- சிறப்பு கட்டுரை!

ஊழல் ஆட்சியைத் திருத்திய பெருமாள்!- சிறப்பு கட்டுரை!

 “காலதூசகன்” என்னும் பெயரில் ஒரு திருடன்! கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அகப்பட்டதை களவாடிவிட்டு (திருடிவிட்டு) காணாமல் போவதில் பலே கில்லாடி!

ஆனால், அப்படி திருடிய செல்வத்தைக் கொண்டு திருமங்கையாழ்வார் போல் கோயில் திருப்பணியெதுவும் செய்தது இல்லை.  

தனக்கு மாடமாளிகை கூட கோபுரங்களை எழுப்பிக்கொண்டு ஏகபோகமாக வாழ்ந்தது இல்லை! காலதூசகன் பாணியே தனி! அதாவது ஸ்ரீவைகுந்த பெருமாளை வணங்கிவிட்டு எங்காவது திருடுவான். தான் திருடிய செல்வத்தை இரு சமபங்காக சமர்ப்பிப்பான்!  முதல் பாதி அப்படியே பெருமாளுக்கு!  

இன்னொரு பாதியை மிகவும் வறுமையில் வாடுபவர்கள், பொருளீட்டி சுயமாக வாழ இயலாத முதியோர், பல்வேறு காரணங்களால் ஆதவற்றோர், பலவகை பாரம்பரியக் கலைத்தொழில் செய்து வசதியின்றி வாழ்ந்து வந்த கலைஞர்கள் போன்றோருக்கு பிரித்துக் கொடுத்து அவர்களை வாழ்விப்பான்! ( அடேங்கப்பா…. நம் சினிமாவுலக மலைக்கள்ளன், நீலமலைத் திருடன் போன்று!) 

       எப்பேர்ப்பட்ட சூழலிலும் தடயமில்லாமல் தப்பிக்கக்கூடிய அவன் ஒருநாள் மணப்படை என்னுமிடத்தில் இருந்த அரண்மனையில் “கைவைத்துவிட்டு தப்பியும் சென்றான்!

ஆனால் அன்றையதினம் அவனுக்கு சந்திராஷ்டமமோ என்னவோ தெரியவில்லை. அவன் தப்பினாலும் அவன் கூட்டாளிகள் மன்னரின் ஆட்களிடம்  வசமாக சிக்கிவிட்டனர். அவர்களை மன்னர்  “நன்கு கவனித்து முறைப்படி விசாரித்ததில்” தங்கள் “தல”யைப்பற்றி   மன்னரிடம் கக்கி விட்டனர்.

காலதூசகனுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது! விஷயமறிந்த காலதூசகன் நேராக ஜட்ஜ் ஐயாவாம் வைகுந்த பெருமாளிடம் சரண்டர் ஆகி கதறினான். தான் இனிமேல் அவ்வாறு நடக்கப்போவதில்லை என உறுதி கூறினான். 

        மறுநாள் காலையில்  மன்னரின் சபை கூடியது. காலதூசகன் மன்னர் முன் தானாக ஆஜரானான்!
ஆனால் என்னவோ தெரியவில்லை மன்னனுக்கு அவனைப் பார்த்ததும் கோபமே வரவில்லை! ஆகவே சாந்தமாகவே விசாரித்தான். 
 

“மன்னா… உங்கள் ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை. உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களைச் சேர்ந்தோரால் கஜானா வளம் வீணாகிறது. மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை” என்று குற்றப்பத்திரிகை வாசித்தான் காலதூசகன்! 
       

அவன் கூறியது யாவும் உண்மையென உணர்ந்த மன்னன் அதிர்ச்சி அடைந்தான். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஆம். கள்வன் காலதூசகன் “ஸ்ரீ வைகுந்த பெருமாளாக” காட்சி தந்து, “உன்னை நல்வழிப்படுத்தவே திருவிளையாடல் செய்தேன்” என்று தெரிவித்து, மன்னனுக்கு அறவுரை வழங்கினார். 

    அன்றுமுதல் அம்மன்னன் நீதிவழுவாத, மக்களின் வாழ்வியல் குறைகளைப் போக்கி நல்லாட்சி செய்தான். 
  
      ஊழல் ஆட்சியை பெருமாள் திருத்தியது இன்றைய “ஸ்ரீவைகுந்தம்”  (ஸ்ரீவைகுண்டம்) எனும் பிரபலமான ஊரில்தான். இத்திருத்தலத்திற்கு புராணகால பெருமைகளும் பல இருக்கின்றன.  பெருமாளுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள “நவ திருப்பதிகளில்” முதன்மையானது.

நவக்கிரகங்களில் முதல்வனான “சூரிய பகவானுக்குரிய” தலம். ஜாதகரீதியில் சூரியன் பலவீனமாக அமையப்பெற்றோரின் குறைகளைப் போக்கி நலம் வழங்குபவர் “ஸ்ரீ வைகுந்த பெருமாள்! இதுவே மூலவர் திருநாமம். ஆதிசேஷன் குடைபோல விரிந்திருக்க, அதன் கீழே நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் பெருமாள். 

     திருடனுக்கு (கள்ளனுக்கு) அருள் செய்ததால் இங்குள்ள உற்சவரின் திருநாமம் “கள்ள பிரான்!”
   இங்கு தரிசனம் பெற்றுத் திரும்புகையில்,   அமைதியும் அருளும் கலந்த ஆனந்த அதிர்வலைகளை ஆழ்மனதில் உணர முடிகிறது. 

  தாயாரின் பெயர் ஸ்ரீ வைகுந்த நாயகி.  திருமலையின் நாயகன் வெங்கடாஜலபதி இத்திருத்தலத்தில் “திருவேங்கடப் பெருமாள்” என்கிற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் அருள் தருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. 

   மிகவும் பழமையான இத்திருக்கோயிலை வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டியது அவசியம். எனக்கு அந்த பாக்கியம் இன்று (25/06/2025) அன்று கிட்டியது. மிகவும் மகிழ்ந்தேன். 

    கள்ளர் பிரானாம் ஸ்ரீ வைகுந்தனின் அனைவருக்கும் கிட்ட,  எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனை. நலமே விளைக.

மு.பழனிவாசன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments