Wednesday, February 4, 2026
Homeஆன்மீகம்அம்மிக்கும் அம்மைக்கும் என்ன சம்பந்தம்?சிறப்பு கட்டுரை!

அம்மிக்கும் அம்மைக்கும் என்ன சம்பந்தம்?சிறப்பு கட்டுரை!

-மு.பழனிவாசன்

ஆடிமாசக்காத்துல அம்மியே பறக்கும்…” என்று ஒரு சொல்லடை புழங்குகிறது. ஆனால், அறிவியல் கோட்பாட்டு விதிகளின்படி “அதெப்படி? கருங்கல்லினால் செய்யப்பட்ட ஒரு அம்மி வேகமான காற்றில் பறக்கும்?” இதை விளக்கவே இந்த கட்டுரை.

உலகின் மற்ற மொழிகளில் எப்படியோ தெரியாது. தமிழ்மொழியைப் பொறுத்தவரை பழமொழிகள், அந்தந்த வட்டார வழக்கு  மொழிகளில் ”சொலவடை” எனப்படும் “சொல்லடை” என்பதெல்லாம் நவீனகால ஹைக்கூ கவிதைகள் என்றே சொல்ல்லாம். ஒரு பழமொழி அல்லது சொலவடையைப் படிப்போருக்கு, கேட்போருக்கு புரிந்துவிட்டால் அது ”பொக்கிஷம்”. புரியா விட்டால் ”புதிர்தான்”. அப்படி ஒரு விஷயத்தைதான் இப்போது கொஞ்சம் விரிவாக பார்க்கப்போகிறோம்.

இயற்கையின் இயல்பாய் தமிழ் மாதமான தை மாதத்தில் தகிக்கத் தொடங்கும் சூரியனானது கோடைவெயிலாக கொளுத்தத் தொடங்கி,  சித்திரையில் உச்சமாகி, பின் வைகாசி, ஆனி மாதங்களில் மெல்ல மெல்ல உஷ்ணத்தை தணித்துக் கொள்கிறது. இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய உடலின் உஷ்ணமும் கூடியிருக்கும். இதனால், உஷ்ணம் சார்ந்த பல்வேறு நோய்கள் தாக்குவது இக்காலகட்டத்தில்தான். குறிப்பாக அம்மை நோய்த்தாக்கம் அதிகமாக பரவி, மனிதர்களை வாட்டி வதைத்துவிடும். அடுத்து ஆடிமாதத்தில் வேகமாக காற்று சுழன்றடிக்கும். இந்த காற்றுக்குத்தான் ”ஆடிக்காற்று”.

இந்த ஆடி மாதத்தில் வீசும் காற்றினால் நிலப்பரப்பின் உஷ்ணம் மெல்ல தணிகிறது. சில நேரங்களில் அவ்வப்போது லேசான சாரலும் இருக்கக்கூடும். இந்த காரணங்களால் மனிதர்களின் உடல் உஷ்ணமும் மெல்ல மெல்ல தணியத் தொடங்குகிறது. உஷ்ணம் சார்ந்த நோய்களும் விடைபெறத்தொடங்கி விடுகின்றன. இதைக்கூறி மக்களை ஆறுதல் படுத்துவதற்காகவும், ஆற்றுப்படுத்துவதற்காகவும், ”ஆடி மாதக்காற்றில் அம்மை(யே) பறக்கும்” என்றார்கள். நாம் மொழிவளத்தை வழக்கம்போல சுருக்குவது, மாற்றுவது என்கிற மொழிப்பித்தலாட்டத்திற்கு ஆட்பட்டு, பொருள் மருவி, “ஆடி மாசக்காத்துல அம்மியே பறக்கும்” என்று காலப்போக்கில் கூறத் தொடங்கிவிட்டோம். இந்தியாவின், தமிழரின், வாழ்வியல் கலாச்சாரத்தை தெளிவாக புரிந்துகொள்ளாமலேயே அந்நிய கலாச்சார பழக்கவழக்கங்களுக்கு இரத்தினக்கம்பளம்  விரித்து ”சலாம்” போடுகிறோம்.

-மு.பழனிவாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments