நாலாவது குரங்கு எங்கே?
மு.பழனிவாசன்
”மகாத்மா” எனப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை நாம் பல்வேறு கோணங்களில் அறிவோம். அவருடைய போதனைகள் அனைத்துமே வாக்கு, செயல் ஆகியவற்றில்
“சத்தியம்” என்பதை மையமாக கொண்டிருக்கும். அதேபோல்
“அஹிம்சை” சார்ந்த கருத்துகளும் மிகப்பிரபலம் என்பதெல்லாம்
நாம் நன்கறிந்ததே. அதே காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட
மூன்று குரங்கு பொம்மைகள் போதித்த வாழ்வியல்
வழிமுறையானது இன்றும் எல்லோருக்கும் நல்வழி
காட்டுவனவாகும்.
மூன்று குரங்குகளின் தத்துவம்: (தத்துவக்குறியீடு)
- தீயவற்றைக் கேட்கக்கூடாது – இது காதுகளைப்
பொத்திய நிலையில் இருக்கும் முதல் குரங்கு
உணர்த்துகிறது. - தீயவற்றைப் பேசக்கூடாது – இது வாய்ப்பொத்திய
நிலையில் இருக்கும் இரண்டாவது குரங்கு
உணர்த்துகிறது. - தீயவற்றைக் காணக்கூடாது – இது கண்களைப்
பொத்திய நிலையில் இருக்கும் மூன்றாவது குரங்கு
உணர்த்துகிறது.
இந்த மூன்று தத்துவங்களை போதிக்கும் இந்த குரங்கு
பொம்மையைப் பற்றி விவரம் தேடியபோது, கிடைத்த
விவரம் என்ன வென்றால், அந்த பொம்மையானது
சீனதேசத்திலிருந்து பரிசாக கிடைக்கப் பெற்றதாக சிற்சில
ஆச்சரியமான குறிப்புகள் கிடைத்தன.
அந்த தத்துவக்குறியீடானது (உருவகம்), முதன்முதலில் 17
ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய பழமொழியாக உலா வந்ததாம்.
ஆனால், அதன் வம்சாவழியைப் பார்த்தால் சீன தத்துவயியலில்
உதித்ததாக கூறப்படுகிறது. மோகந்தாஸ் கரம்சந்த் காந்திக்கு
சீனத்துறவியான ”நிஷிதட்சு ஃபுஜி”என்றொரு துறவியால்
பரிசளிக்கப்பட்டதாகும். காந்தி இதை ஏற்றுக்கொண்டதால்,
இந்த உருவகம் இந்தியா மற்றும் உலகளவில் பிரபலமடைந்தது.
சரி.. இப்போது இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு
வருவோம்.
இந்த மூன்று குரங்குகள் பொம்மை கூறும் தத்துவத்தை
சுமார் 12 –ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1101 முதல் கி.பி.1200 க்கும்
இடைப்பட்ட காலம்) நம் ஞானக்கிழவியான ஒளவையார்
தன்”மூதுரை” நூலில் ஒரு வெண்பாவில் (வெண்பா : 9)
தெரிவித்திருக்கிறார் என்பது பிரம்மிப்பூட்டுகிறது.
இதோ அந்த வெண்பா:
”தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே;
அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது”
விளக்கம்:
தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்
கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில்
சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக்
கெடுதலே.
தீயாரைக் காண்பதுவும் தீதே – முதல் குரங்கு
தீயார் சொல் கேட்பதுவும் தீதே – இரண்டாம் குரங்கு
தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே – மூன்றாம் குரங்கு
(இது நல்லவர்களாக வாழவேண்டும் என்கிற புனித
என்ணமுடையவர்கள் தீயாரைப் பற்றியோ, தீய சொற்களையோ
என்றும் பொருள்கொள்ளலாம்)
அந்த குரங்கு பொம்மையின் மூலம் ஜப்பான்
பழமொழியோ, சீன தத்துவமோ, காந்தியின் கோட்பாடோ
வெறும் மூன்று நல்ல விஷயங்களை தெரிவிப்பதுடன் தங்களின்
அடுத்த வேலையை கவனிக்கச்சென்று விடுகின்றன.
இங்கேதான் தமிழ் மூதாட்டி ஒளவை முற்றிலும்
தனித்துவமாக, முத்தாய்ப்பான நான்காவதாக இன்னொரு
கருத்தையும் நயம்பட உரைத்திருக்கிறாள்.
அதுதான் “அவரோடு (தீயவரோடு) இணங்கி இருப்பதுவும் தீது”
அதாவது, தீயவரை நாம், நம்முடன் சரிசமமாக நடத்தி,
அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதும், தீமை தரக்கூடிய
விஷயம் என்பது உண்மைதானே?..
இதே ஒளவைதான் தனது ஆத்திசூடி நூலில் ”சேரிடம்
அறிந்து சேர்” என்கிறார். அதாவது நாம் நட்புறவு
கொள்ளும்போது அந்த நபர் யார்? எப்படிப்பட்டவர்?
அவருடைய பின்னணி நல்ல தரமும் பண்பும் வாய்ந்ததாக
இருக்குமா? என அறிந்து அவருடன் நட்பு பாராட்ட வேண்டும்
என்பதையும் வலியுறுத்துகிறார்.
சீன, ஜப்பானிய தத்துவம் “மூன்று குரங்குகள் பொம்மை”
மூலம் சொன்ன விஷயத்தை, சொல்லாமல் விட்டுவிட்ட
நான்காவது விஷயத்தையும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில்
12 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்பாற்புலவர் ஒளவை
ஆணித்தரமாக பாடியது ஆச்சரியமான விஷயம்தானே! இந்த
விஷயம் காந்திக்கு தெரிந்திருந்தால், ஒளவையும் அன்றே
உலகளவில் பிரபலமாகியிருப்பாரல்லவா?
இதிலிருந்து ஒன்றுமட்டும் நன்றாக விளங்குகிறது.
அதாவது தமிழ், தமிழன் என்றெல்லாம் தற்பெருமை
பேசுகிறோமேயொழிய, நம் தமிழ்மொழி இலக்கியங்களில்
இருக்கும் செறிவார்ந்த அறிவுக்களஞ்சியத்தை நாம் இன்னும்
உணர்ந்து கொள்ளவேயில்லை என்பது மட்டும் உண்மை.
இதைத்தான் “இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத
இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே”
என்னும் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது. இனியாவது
மூன்றுகுரங்குகள் பொம்மையை காணநேரும் போதெல்லாம்
ஒளைவைப்பாட்டி ஞாபகம் வருமானால், இந்தக்கட்டுரை
பெருமையுறும்.
–மு.பழனிவாசன்

