21 ஆம் நூற்றாண்டில் வைரமுத்து என்னும் கவிஞன் வாழும் காலத்திலேயே தமிழ்மொழிக்கான அகராதியை புதியதாக எழுத வேண்டும் போல.. ஏனெனில் சமீபகாலமாக அவரின் சொல்லாட்சி அப்படித்தான் இருக்கின்றன!
சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் “ராமன் புத்தி சுவாதீனம் இழந்தவன்” என்று மொழிந்திருக்கிறார். அதாவது கம்பராமாயணத்தில் வரும் “திகைத்தல்” என்கிற வார்த்தைக்கு “புத்தி சுவாதீனம் இழந்தவன்” என்று பொருள் கொள்கிறார்! என்ன ஒரு அற்பு(அபத்)தமான சொல்லாட்சி வைரமுத்துவினுடையது!
”ஆவியைச் சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தில் வந்த
தேவியை, பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை!”
என வானர அரசனான வாலி இராமபிரானைப்பார்த்து கேட்கிறான் என கம்பன் கவிபாடினான். ஒருவன் தன் இக்கட்டான சூழலில் செய்யக்கூடாத ஒன்றை தற்செயலாக செய்துவிட்டால் அவனைப்பார்த்து ”உனக்கென்ன புத்தி பேதலித்து விட்டதா? புத்தி தடுமாறிவிட்டதா? பைத்தியமா உனக்கு?” என்று கேட்பது சராசரியானவர்களின் வழக்குச் சொல்லாடல். அப்படி கேட்டுவிட்டதாலேயே சம்பந்தப்பட்டவன் உண்மையிலேயே ”பைத்தியம்” என்று அர்த்தமில்லை. அதுபோலத்தான் இங்கேயும்!
ராமனைப்பார்த்து வாலி “திகைத்த” என்று கேட்டதாலேயே ராமன் அப்படிப்பட்டவனில்லை. ஆனால் வாலி அவ்வாறு கேட்டதாலேயே “கம்பன் கடவுளானான். இராமன் மனிதனான்” என்பது வைரமுத்துவின் வாதம். உண்மையில் ராமன் தன் அவதார காலத்தில் ஒரு இடத்திலேயும் தான் ஒரு அவதார புருஷன் என்று சொல்லிக்கொள்ளவேயில்லை! இராம அவதாரத்தில் அவன் ஒரு சாதாரண மானிடன்தான். ஆனால், அவன் திருமாலின் அவதாரம் என்பது நம்பிக்கையாளர்களின் கருத்து. அதில் தலையிட வைரமுத்துவுக்கு உரிமையில்லை. அதேபோல் எந்த இடத்திலும் கம்பன் இராமனை விட்டுக் கொடுக்கவேயில்லை. அப்படி விட்டுக் கொடுத்திருந்தால், கவிஞனின் பார்வையிலேயே இராமனை இகழ்ந்திருப்பானே! அவன் நோக்கம் அதுவல்ல. இராமனால் வதைக்கப்பட்ட நிலையில் ஒரு கதாபாத்திரத்தின் புலம்பலாகத்தான் “திகைத்தனை”என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் கம்பன்.
உண்மையில் இராமன் புத்தி சுவாதீனமற்ற நிலையில் இருக்கவில்லை. ஆனால், கம்பன் விழா மேடையிலேயே, வம்பனாக மாறிய வைரமுத்து கம்பனின் வார்த்தையை வைத்துக்கொண்டு இராமனையே இகழ்ந்ததைப் பார்த்தால் இவர்தான் மதிமயங்கி அல்லது திகைத்தனை அல்லது புத்தி சுவாதீனமற்றவராகி விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மேடையில் இப்படி பேசியதன் உள்நோக்கம் என்னவென்றால், “எப்படியாவது இராமனை கேவலப்படுத்த வேண்டும். அதன் மூலம் சர்ச்சையை உருவாக்க வேண்டும். மக்களைக் குழப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.”இதுதான் அவர் அவா. இது ஒட்டக்கூத்தரின் மனோநிலை!
எனக்கு இலங்கை ஜெயராஜ் மீது உயர்ந்த அபிமானம் உண்டு. ஆனால், அவரையும் வைத்துக்கொண்டே வைரமுத்து பேசியபொழுது அதை இமைகொட்டாமல் அவர் பார்த்துக் கொண்டிருந்தார். வைரமுத்து பேசும்போது இடைமறித்திருக்க வேண்டும். ராமனுக்காகவும், கம்பனுக்காகவும் வக்காலத்து வாங்கியிருக்க வேண்டும். ஆனா அவர் அவ்வாறு செயல்படவில்லை. அதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆக, என் பார்வையில் இனி அவரும் ஒரு சுகி.சிவமே.
இனி வரும் காலங்களில்”ஒருவன் செய்வதறியாது திகைத்தான்” என நாவலாசிரியர்கள் உள்ளிட்ட எழுத்தாளர்கள் எழுதத்தேவையில்லை! அதற்குப்பதிலாக “பைத்தியமாகிவிட்டான்”, மெண்டலானான், புத்தி சுவாதீனமற்றவன் ஆனான்!”என எழுதினால் போதும்! திராவிட தமிழ் அகராதி அதை அப்படியே சுவீகாரம் செய்து கொள்ளும். விக்கிப் பீடியாவிலும் திருத்தம் செய்யப்படலாம்! காலத்தின் கோலம் இது! அட..ராமா!
மு.பழனிவாசன்

