Home செய்திகள் விஜய் முதலமைச்சராகியதை கொண்டாடி 1017 படிக்கட்டுகள் மண்டியிட்டு ஏறிய இளம் பெண்!

விஜய் முதலமைச்சராகியதை கொண்டாடி 1017 படிக்கட்டுகள் மண்டியிட்டு ஏறிய இளம் பெண்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி ஒருவர், அக்கட்சியின் தலைவர் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அய்யர்மலையில் உள்ள 1017 படிக்கட்டுகளிலும் கால் மண்டியிட்டு ஏறித் தனது அசாத்திய நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார்.

மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் பட்டதாரியான மோகனசுந்தரி (21), தவெகவின் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாகவே அங்குள்ள புகழ்பெற்ற அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்திருந்தார்.

தற்போது தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகக் கடந்த மூன்று நாட்களாகக் கடுமையான விரதம் இருந்த மோகனசுந்தரி, இன்று காலை 8.15 மணியளவில் அய்யர்மலையின் 1017 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படியாகக் கால் மண்டியிட்டுக் செங்குத்தான மலையேறத் தொடங்கினார்.

சுமார் மூன்று மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, முற்பகல் 11 மணியளவில் மலை உச்சியை அடைந்த அவர், அங்குள்ள இரத்தினகிரீஸ்வரரை முறைப்படி தரிசித்து சிறப்புப் பூஜைகள் செய்து தனது நேர்த்திக்கடனை நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்தார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் போது தவெக கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் புஷ்பராஜ், நிர்வாகிகள் பூவரசன், சிவபெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் பலரும் உடனிருந்து அவரை உற்சாகப்படுத்தினர்.

Exit mobile version