Home Uncategorized 15 டன் போலி உரம் பறிமுதல்.. டிடிவி தினகரன் கோரிக்கை..நடவடிக்கை எடுக்குமா அரசு?

15 டன் போலி உரம் பறிமுதல்.. டிடிவி தினகரன் கோரிக்கை..நடவடிக்கை எடுக்குமா அரசு?

தஞ்சை வடக்கு வீதியில் இயங்கிவரும் குடோனில் இருந்து 15 டன் போலி உரம் பறிமுதல் – விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை.

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வீதியில் இயங்கிவந்த குடோனில் இருந்து 15 டன் போலி உரம் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போலி உர விற்பனை விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்லில் தொடங்கி பூச்சிமருந்து, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வரை நிலவும் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்தியே தனியார் நிறுவனங்கள் போலி உரங்களை தயாரித்து விற்பனை செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே, மழை,புயல், வெள்ளம்,வறட்சி, விளைச்சல் பாதிப்பு என பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலும், தூர்வாரப்படாத வாய்க்கால்கள், கடைமடை வரை வந்து சேராத தண்ணீர் போன்ற அரசு நிர்வாகத்தின் அலட்சியங்களுக்கு மத்தியிலும் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது அவ்விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்திலும் முறைகேடு கண்டறியப்பட்டிருப்பது விளைச்சலை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, தஞ்சாவூரில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட அளவில் குழு அமைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் உரத்தின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் வேளாண்மைத் துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். –டிடிவி தினகரன்.

Exit mobile version