விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்ற கடந்த 15 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேறியுள்ளதாக வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்ச்சியூட்டும் ஆய்வின்படி, இந்த குறுகிய காலத்தில் தமிழகத்தில் 25 கொலைகளும், 4 இரட்டைக் கொலைகளில் 8 பேரும், 19 பாலியல் வன்கொடுமைகளும், 9 போக்சோ (POCSO) குற்றங்களும், 9 கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதோடு, கந்துவட்டி கொடுமையால் ஒருவரும், காவல்துறை தாக்குதலால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு சம்பவங்களுடன் மதுபோதையால் மட்டுமே 12 கடுமையான குற்றங்கள் நடந்துள்ள நிலையில், கடந்த மே 23-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 9 கொடூரக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது சட்டம் ஒழுங்கின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
மாவட்டம் வாரியாகப் பார்க்கும் போது கோவையிலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தலா 6 குற்றங்களும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 5 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன; குறிப்பாக மணலிப்புதூரில் 14 மணி நேர இடைவெளியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது,
கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் காதலியின் கண் முன்னே காதலன் வெட்டிக் கொல்லப்பட்டது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை மற்றும் கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது போன்ற தொடர் சம்பவங்கள் மாநிலம் தழுவிய அளவில் தற்பொழுது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சத்தையும், அரசியல் ரீதியான விவாதங்களையும் கிளப்பியுள்ளன.
