தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, மாநில எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும் செய்திகளில் வந்த அளவில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளதாகப் பட்டியலிட்டுள்ள அவர், மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக மாறியிருப்பதாகச் சாடியுள்ளார்.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடூரத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் விழுப்புரம் மரக்காணத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும், மதுரையில் சிறுவன் படுகொலை, கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில் போதை கும்பல் 13 வாகனங்களை அடித்து நொறுக்கிய அட்டூழியம் என அடுக்கடுக்கான குற்றங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு வீர வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி, இன்று காலை அவசரகதியாக நடத்தப்பட்ட காவல்துறை உயர்மட்டக் கூட்டம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும், அச்சுறுத்தலில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறது என்பதற்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
