Sunday, March 22, 2026
Homeகிளாசிக்"நாடோடி மன்னன்" ரிலீசான தினமின்று!

“நாடோடி மன்னன்” ரிலீசான தினமின்று!

“இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி” என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார்.  அந்த நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு.

‘மலைக்கள்ளன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! இந்தப் படம்தான் அவர் தயாரித்து இயக்கிய முதல் படம். நடிகர் எம்ஜிஆரை தயாரிப்பாளர் எம்.ஜி.ஆர்., இயக்குநர் எம்.ஜி.ஆர்., என அடையாளப்படுத்திய படம்.

‘இஃப் ஐ வேர் ஏ கிங்’ என்ற பிரான்க் லாய்ட் எழுதி இயக்கிய வரலாற்று நாடகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அதுபோல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அவரது திட்டம் என்று சொல்வதைவிட கனவு என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் அந்தக் கனவு நனவானது. நாடோடி மன்னன் படப்பிடிப்பும் தொடங்கிச்சு. எம். ஜி. ராமச்சந்திரன், பானுமதி, பி. எஸ். வீரப்பா, எம். என். ராஜம், சரோஜா தேவி, எம். என். நம்பியார், சந்திரபாபு, சகுந்தலா, முத்துலட்சுமி, எம். ஜி. சக்கரபாணி, ஈ.ஆர்.சகாதேவன், கே.ஆர்.ராம்சிங், கே.எஸ்.அங்கமுத்து என்று பெரிய நடிப்புப் பட்டாளமே படத்தில் உண்டு.

பெரும் பொருட் செலவு:

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். 20,000 அடி ரீல் செலவானது என்று சொல்லக் கேட்டதுண்டு. நடிகர்களுக்கு சம்பளமும் உச்சம்தான். பெரிய முகங்கள் மட்டுமல்ல சாதாரணப் பணியில் இருந்த ஊழியருக்கும்கூட தினமும் சூட்டிங்கின்போது விருந்து சாப்பாடுதான். தளத்தில் பாரபட்சமே இருந்ததில்லையாம். இப்படிப் பொருட்செலவு செய்யப்பட்டது திரைத்துறையில் பல பேச்சுக்களை உண்டாக்கியது. அப்போதுதான் எம்ஜிஆர், “இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி. நாடோடி மன்னன் ஒரு பரிசோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்.

MGR

‘கேவா’ கலர் திரைப்படம்!

கறுப்பு வெள்ளையாகத்தான் நாடோடி மன்னன் எடுக்கப்பட்டது. ஆனால், படம் பாதி சென்றபோது நடிகை பானுமதியுடன் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே சொன்னதுபோல் படம் மொத்தம் 20,000 அடிகளைக் கடந்தது. பல காட்சிகள் நேர்த்திக்காக திரும்பத்திரும்ப எடுக்கப்பட்டதால் கூடுதலாக ஃபிலிம் செலவானது. படப்பிடிப்பின்போது ஒருமுறை நடிகை பானுமதி, “மிஸ்டர்.. எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர்., “படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க” எனக் கூற படத்தில் இருந்து பானுமதி விலகிக்கொண்டார். பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி வரும் காட்சிகளில் இருந்து கடைசி 7 ரீல் கேவா கலர் பயன்படுத்தி கலர் படமாக எடுக்கப்பட்டது. அலிபாபாவும் 40 திருடர்களும்தான் தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் (Gevacolor) திரைப்படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரோஜா தேவிக்கு திருப்புமுனை!

பானுமதி விலகியதால் சரோஜா தேவி வர, படத்தில் அவர் என்ட்ரிக்கு மானைத் தேடி மச்சான் வர்றான் பாடலும் வைக்கப்பட்டது. கலர்ஃபுல்லான அந்தப் பாடல் அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. எம்ஜிஆர் அன்று அந்த வாய்ப்பைத் தராவிட்டால் நாடோடி மன்னனில் ரத்னாவாக சரோஜா தேவி மிளிராவிட்டால் அவருக்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் பாதை திறந்திருக்காது என்றே சொல்லலாம். சரோஜாதேவிக்கு திருப்புமுனை படம் அது. 

சண்டையும் பாடலும்..

படத்தில் சண்டைக் காட்சிகளும் பாடல்களும் வெறும் ப்ளஸ் என்று முடித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு சண்டையைப் பற்றியும் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் கயிற்றுப் பாலத்தின் மீது பி.எஸ்.வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் போடும் சண்டைக் காட்சிக்கு தியேட்டர்களில் விசில் பறக்கும்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்திரை பதித்திருக்கும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் தூங்காதே தம்பி தூங்காதே இன்றளவும் ஒரு உத்வேக உபதேசப் பாடலாக நிலைத்து நிற்கிறது.

அதேபோல், 
பாடு பட்டா தன்னாலே 
பலனிருக்குது கை மேலே 
பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே..
பாடலில் பொதுவுடைமை கருத்துகளை முன்வைத்திருப்பார்.

இந்த நாடோடி மன்னனுக்குப் பல்வேறு வெளியீட்டு நாள்கள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நாள்களில் அப்படத்தை வெளியிடவே  முடிய வில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வேறு படங்கள் அனைத்தையும் எம்ஜிஆர் ஒத்தி வைத்திருந்தார். அப்போது படச்சுருளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஒரு சுருளின் உண்மை விலை எழுபத்தைந்து ரூபாய் என்றாலும் அது கறுப்புச் சந்தையில் நானூற்றைம்பது வரை விற்பனையாயிற்றாம். இப்படிப் பல்வேறு முனைகளில் செலவு கூடிக்கொண்டே போனது. அதனால் படத்தயாரிப்புக்குப் போதிய பணத்தைப் புரட்டவே முடியவில்லை. டிஸ்ட்ரிபியூஷன் முறைகளில் பல்வேறு புதிய வணிக உத்திகளைக் கையாண்டு நிலைமையை ஓரளவுக்குச் சமாளிச்சார்  ஆர்.எம். வீரப்பன். ஒரு கட்டத்திற்கு மேல் ஏவியெம் மெய்யப்பச் செட்டியாரிடமே சென்று கடன்வாங்க வேண்டிய சூழ்நிலை. நாடோடி மன்னனைப் போன்ற கதையமைப்பிலேயே அங்கே ‘உத்தமபுத்திரன்’ தயாராகிக்கொண்டிருந்தது. ஆனாலும், வீரப்பனால் தம் படத்திற்குப் பணம் கேட்க அங்கே செல்ல இயல்கிறது என்றால் அப்போது திரை வணிகத்தில் நிலவிய நலமான போக்கை நினச்சா வியப்புதான்.

இப்படிப் ஏகப்பட்ட சிக்கல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு இதே ஆகஸ்டுத் திங்கள் 22ஆம் நாள் நாடோடி மன்னன் ரிலீஸானது. திரையிட்ட இடமெங்கும் கூட்டம் குவிந்தது. படம் வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இன்னொரு படம் இதுவரை பெறவில்லை என்பதே உண்மை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments