நாகப்பட்டிணத்தில் பல வருடங்களுக்கும் முன் ஒரு பெண்மணி நெல்மணிகளை கடையில் வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
அவர் பெயர் பெரியநாகத்தாமாள். அவர் சிறந்த அம்மன் பக்தை. ஒருநாள் அவர் கடைக்கு மஞ்சள் வண்ண புடவைகட்டி, மங்களகரமான தோற்றத்துடன் ஒரு பெண்மணி வந்தாள்.
கடை உரிமையாளர் நாகத்தம்மாளிடம் சிறிதளவு நெல் தருமாறு கேட்டு ஒரு சிறுகூடையைக் கொடுத்தாள். அவளுடைய தோற்றமும் பேச்சும், நாகத்தம்மாளை வெகுவாக ஈர்த்தது.
கூடை வாங்கிய நாகத்தம்மாள் கடைக்குள் சென்று நெல்லை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த மஞ்சள் புடவை அம்மணி அங்கு இல்லை. எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை.
அதே நினைவுடன் அன்றிரவு பெரிய நாகத்தம்மாள் தூங்கினார். அவரது கனவில் மாரியம்மன் தோன்றியதுடன், “இன்று காலையில் நான்தான் கடைக்கு வந்தேன். உன் கடையின் அருகிலுள்ள வேப்பமரத்தடியில் புற்று வடிவில் குடிகொண்டிருக்கிறேன்” என்று கூறி மறைந்தாள்.
மறுநாள் முதல் நெல்லுக்கடை பெரிய நாகத்தம்மாள் அந்த புற்றுக்கு மஞ்சள் குங்குமம் தூவி மலர்கள் சூடி பூஜை செய்யத் தொடங்கினார். நாளாக நாளாக அம்மனின் சக்தி அனைவரையும் ஆட்கொண்டது. அவர்கள் வேண்டுதல் உடனுக்குடன் நிறைவேறியதால் அங்கே பொதுமக்கள் வருகையும் அதிகரித்தது.
நாளடைவில் பிரசித்தி பெர்ற பெருங்கோயிலாக உருவெடுத்தது. நெல்கடையின் அருகில் மாரியம்மன் அருள்பாலித்ததால் ”நெல்லுக்கடை மாரியம்மன்” என்னும் பெயர் பெற்றாள்.
இத்திருக்கோவில் நாகப்பட்டிணம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்திலும், நாகப்பட்டிணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
அடியவர்தம் குறைபோக்குவதில் அளவற்ற பேரருளுடன் விளங்குகிறாள் “நாகப்பட்டிணம் நெல்லுக்கடை மாரியம்மன்”.

