“என் பாதை இனி வேறு!”
பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கே. அண்ணாமலை தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்துச் சமூக ஊடகங்கள் வாயிலாக விரிவாகப் பேசியுள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் 25 அன்று தான் பாஜகவில் இணைந்ததாகவும், தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரிய பாக்கியமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ள அண்ணாமலை, தற்போது தனது பாதை வேறாக உள்ளதாகவும், பெரிய இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிக மக்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டின் அரசியல் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய ஒரு புதிய அரசியல் இயக்கத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தோடு எல்லோரும் இணைந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ஒரு சாதாரண கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து வந்துள்ள தன்னைப்போன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, இத்தனை கால அரசியல் அனுபவங்களின் தொடர்ச்சியாகத் தற்பொழுது தனித்துவமான முறையில் நம்முடைய புதிய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காகவே தான் உங்கள் முன் நிற்பதாகத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

